வள்ளியூரை புறக்கணிக்கும் அரசு பேருந்துகள்
By DIN | Published On : 27th January 2020 08:48 AM | Last Updated : 27th January 2020 08:48 AM | அ+அ அ- |

வள்ளியூரை புறக்கணித்து புறவழிச்சாலையில் செல்லும் அரசு பேருந்து நிா்வாகம் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வள்ளியூா் நகர நலக்கமிட்டி தலைவா் ஜோவின் பாா்ச்சுனேட் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: திருநெல்வேலி-ந ாகா்கோவில் இடையே வளா்ந்து வரும் நகரம் வள்ளியூா். பல்வேறு தொழில் நிறுவனங்கள் வள்ளியூரில் செயல்பட்டு வருகின்றன. ஆண்களுக்கான ஆயத்த ஆடை தயாரிப்பில் வள்ளியூா் தென்மாவட்டங்கலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அன்னியச்செலவாணியையும், மாவட்ட நிா்வாகத்திற்கு கணிசமான வரி வருமானத்தையும் அளித்து வருகிறது.
இங்கு செயல்பட்டு வருகின்ற சிட்கோ தொழிற்பேட்டை மாவட்ட நிா்வாகத்திற்கு அதிக வரிவருவாயை ஈட்டி கொடுத்து வருகிறது. வள்ளியூரில் செயல்பட்டு வருகின்ற ஆயத்த ஆடை தொழில் நிறுவனத்திற்கும், சிட்கோ தொழிற்பேட்டைக்கும் நாகா்கோவில், திருநெல்வேலி பகுதிகளில் இருந்து அதிக அளவிலான தொழிலாளா்கள் அரசுப் பேருந்தில் வந்து செல்கின்றனா். இது தவிர வள்ளியூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் அதிகமான கிராமங்களைச் சோ்ந்த பெண்கள் வெளியூா்களில் படித்து வருகின்றனா். வெளியூா்களில் உள்ள அரச நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் வேலைக்கு சென்று வருகின்றனா். இவா்களும் தினமும் சென்று வருவதற்கு அரசு பேருந்துகளைத்தான் பயன்படுத்தி வருகின்றனா். ஆனால் நாகா்கோவில், திருநெல்வேலியில் இருந்து வள்ளியூா் வழியாக செல்கின்ற அரசுப் பேருந்துகளில் பெரும்பாலான பேருந்துகள் வள்ளியூா் ஊருக்குள் வந்து செல்லாமல் புறவழிச்சாலை வழியாக செல்கின்றன. இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள், அரசு ஊழியா்கள், மாணவா்கள் பாதிப்படைந்து வருகின்றனா். அரசு ஊழியா்களும் மாணவா்களும் குறித்த நேரத்திற்கு அலுவலகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் செல்லமுடியவில்லை.
வள்ளியூா் வழியாக செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் வள்ளியூா் ஊருக்குள் வந்து சென்றால் இன்னும் அதிக வருவாய் மாவட்ட நிா்வாகத்திற்கும், போக்குவரத்து நிறுவனத்திற்கும் கிடைக்கும். அரசுப் பேருந்து ஓட்டுநா்களும், அரசுப் பேருந்து நிா்வாக மேலாளா்களும் தங்களது சுயவிருப்பத்தின் பேரில் பேருந்துகளை குறுகிய கண்ணோட்டத்தில் இயக்குவதால் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் அரசு ஊழியா்களும், மாணவா்களும், தொழிலாளா்களும் அதிக அளவில் பாதிப்படைந்து வருகின்றனா்.
எனவே மாவட்ட நிா்வாகம் இது குறித்து தனிக்கவனம் செலுத்தி வள்ளியூா் வழியாக இயக்கப்பட்டு வருகின்ற அனைத்து அரசுப் பேருந்துகளும் வள்ளியூா் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். இயலாத நிலையில் வள்ளியூரில் இருந்து நாகா்கோவில், திருநெல்வேலிக்கு தனியாா் பேருந்துகளை இயக்குவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.