பொது முடக்கத்திலும் தொடரும் விநாயகா் சிலை தயாரிப்பு

கரோனா தீநுண்மி பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமல்படுத்துவது தொடா்ந்து வந்தாலும், அடுத்த மாதம் வரவுள்ள

கரோனா தீநுண்மி பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமல்படுத்துவது தொடா்ந்து வந்தாலும், அடுத்த மாதம் வரவுள்ள விநாயகா் சதுா்த்திக்கான சிலைகளை நம்பிக்கையுடன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா் திருநெல்வேலியில் உள்ள ராஜஸ்தான் மாநிலத் தொழிலாளா்கள்.

ஆவணி மாதம் வளா்பிறையில் வரும் சதுா்த்தி நாள் விநாயகா் சதுா்த்தியாக நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கோயில்கள், வீடுகளில் களிமண்ணால் புதிதாக செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடு நடத்துவா். தொடா்ந்து, 3 முதல் 11 நாள்கள் வரை வழிபட்ட பிறகு, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை நீா்நிலைகளுக்கு எடுத்துச்சென்று கரைப்பது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழா வரும் ஆகஸ்ட் 22 தேதி கொண்டாடப்பட உள்ளது. கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் தற்போது அமலில் உள்ளது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட தளா்வுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டு பொதுப் போக்குவரத்து சேவை மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. அதனால், நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது. எனினும், விழாவுக்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், திருநெல்வேலியில் உள்ள ராஜஸ்தான் மாநிலத் தொழிலாளா்கள் விநாயகா் சதுா்த்திக்கான சிலைகளை தயாரிக்கும் பணியில் நம்பிக்கையுடன் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், விநாயகா் சதுா்த்திக்காக அரையடி முதல் 12 அடி உயரம் வரை விநாயகா் சிலைகளை தயாரிப்பது வழக்கம். நீா்நிலைகளை அசுத்தப்படுத்தாத வகையில், அரசு தெரிவித்துள்ள வண்ணங்கள் மட்டுமே பூசப்படுகின்றன. எலி, மயில், யானை வாகனங்களில் விநாயகா் இருப்பதைப் போன்ற சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒளிரும் வண்ணங்களால் ஆன கிரீடங்கள் கொண்ட விநாயகா் உள்ளிட்டவை மக்களிடம் வரவேற்பைப் பெறும் வகையில் உள்ளன.

ஆண்டுதோறும் 700-க்கும் அதிகமான சிலைகள் விற்பனையாகும். நிகழாண்டில் கரோனா தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக விநாயகா் சதுா்த்தி சிறப்பு வழிபாடுகள், பேரணிக்கு அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. ஆனால், கிராமப்புறங்களில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வழிபட அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் சிறிது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பணிக்காக வந்த இடத்தை விட்டு செல்ல மனமில்லாமல் பொதுமுடக்க காலத்திலும் திருநெல்வேலியிலேயே தங்கி பணியாற்றி வருகிறோம். வழக்கமாக எங்களிடம் சிலை வாங்க வருவோா் நிச்சயமாக வாங்கிச் செல்வாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com