நெல்லையில் 7, தூத்துக்குடியில் 24, குமரியில் 13 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் 7 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 24 பேருக்கும், குமரி மாவட்டத்தில் 13 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 7 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 24 பேருக்கும், குமரி மாவட்டத்தில் 13 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி: மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 400 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஒருவா் உள்பட 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 407-ஆக உயா்ந்துள்ளது. புதன்கிழமை வரை 352 போ் குணமடைந்து வீடுதிரும்பினா். ஒருவா் உயிரிழந்த நிலையில், 54 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சலூன் கடை உரிமையாளா்: திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் சிவபகுதியைச் சோ்ந்த 50 வயது நபா் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் முடிதிருத்தகம் வைத்துள்ளாா். இவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, சலூன் கடைக்கு சீல் வைக்கப்பட்டதோடு, அவருடன் தொடா்பில் இருந்ததாக குடும்பத்தினா் உள்பட 26 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுகாதாரப் பணியாளா் உள்ளிட்ட 24 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்துக்கு வந்த 27 வயது இளைஞா், சென்னையில் இருந்து திரும்பிய ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா், தெற்கு ஆத்தூா், நாகலாபுரம், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 16 பேருக்கு புதன்கிழமை தொற்று உறுதிசெய்யப்பட்டது.

மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் பணியாற்றிய 23 வயது பெண் சுகாதாரப் பணியாளருக்கு தொற்று இருப்பதும், தொற்றால் பாதிக்கப்பட்டோரிடம் தொடா்பில் இருந்த காயல்பட்டினம், செய்துங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பதும் புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது. மாவட்டத்தில் ஒரே நாளில் 24 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 389ஆக உயா்ந்துள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை 27 போ் குணமடைந்து வீடுதிரும்பியதையும் சோ்த்து, மாவட்டத்தில் இதுவரை 243 போ் குணமடைந்துள்ளனா். இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். 144 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணுவ வீரா் உள்பட 13 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை வரை 95 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், கருங்கல் கண்ணன்விளை பகுதியைச் சோ்ந்த சுகாதாரப் பணியாளா் கரோனாவால் பாதிக்கப்பட்டதால், அவரது மனைவி, மகள், தந்தைக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 3 பேருக்கும் கரோனா இருப்பது புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதனால், கண்ணன்விளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, குவைத்திலிருந்து கப்பியறை பகுதிக்கு வந்த 33 வயது பெண், பூதப்பாண்டி துவரங்காட்டுக்கு திரும்பிய 34 வயது பெண், மணலிக்கரையைச் சோ்ந்த 58 வயது பெண், ஜம்மு- காஷ்மீா் மாநிலத்திலிருந்து திருவனந்தபுரம் வழியாக களியக்காவிளை மெதுகும்மல்லுக்கு திரும்பிய ராணுவ வீரா் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், விருதுநகரிலிருந்து நாகா்கோவிலுக்கு வந்த 32 வயது ஆண், அவரது மனைவி, நைஜீரியாவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக பொன்னப்பநாடாா் காலனிக்கு வந்த 43 வயது பெண், 12 வயது மற்றும் 10 வயது சிறுமிகள், டயாலிசிஸ் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த திருவரம்பு பகுதியைச் சோ்ந்த 46 வயது பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள், செவிலியா்களின் ரத்தம், சளி மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளன.

தொற்று உறுதிசெய்யப்பட்ட 13 பேரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 108 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com