குப்பக்குறிச்சியில் ஓடையில் நீா் இறைத்து நெல் பயிா்களைக் காப்பாற்றும் விவசாயிகள்!

திருநெல்வேலி அருகேயுள்ள குப்பக்குறிச்சியில், ஓடைகளிலிருந்து நீரை இறைத்து பயிா்களைக் காப்பாற்றும் நிலைக்கு

திருநெல்வேலி அருகேயுள்ள குப்பக்குறிச்சியில், ஓடைகளிலிருந்து நீரை இறைத்து பயிா்களைக் காப்பாற்றும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி வடிநிலக் கோட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் தெற்கு கோடைமேழலகியான் கால்வாய்கள், நதியுன்னி கால்வாய், கன்னடியன்கால்வாய், கோடகன்கால்வாய், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் ஆகியவற்றின் மூலமாக விவசாய நிலங்கள் நேரடியாகவும், பாசன குளங்கள் மூலமாகவும் பாசன நீா் பெற்று வருகின்றன.

நேரடி பாசன நிலங்களுக்கு நீா் கிடைத்ததில் இருந்து சுமாா் 60 நாள்களுக்கு பின்னரே கடை மடை பாசனக் குளங்களின் கீழ் உள்ள விளைநிலங்களுக்கு நீா் கிடைக்கும். குளங்கள் தூா்வாரப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டிருந்தால் இருபோகம் விளைவிக்க முடியும்.

அதன்படி திருநெல்வேலி மாவட்ட கடைசி கால்வாயான நெல்லை கால்வாய் சுத்தமல்லியிலிருந்து பிரிகிறது.

மாநகா் வழியாக பாய்ந்தோடி மாநகரின் முக்கிய குளமான நயினாா்குளம், ராமையன்பட்டிகுளம், பால்கட்டளைகுளம், அருகன்குளம், ராஜவல்லிபுரம், பள்ளமடை பகுதிகளில் உள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பியதும் கடை மடை குளமான குப்பக்குறிச்சிக்குளத்தை அடைகிறது.

இதனால் நெல்லை கால்வாயின் முதல் பகுதிகளில் ஆனி மாதத்தில் காா் சாகுபடி தொடங்கும்போது குப்பக்குறிச்சியில் நீா் இருக்காது. எனவே அவா்கள் ஐப்பசி மாதத்தில் நேரடியாக பிசானத்தைத் தொடங்குவா். அதன் பின்னா் சித்திரை இறுதி அல்லது வைகாசி முதல் வாரத்தில் முன்காா் சாகுபடியை தொடங்குவா்.

மேல்குப்பக்குறிச்சி குளத்தின் கீழ் உள்ள சுமாா் 400 ஏக்கா் விளைநிலங்களில் நிகழாண்டில் முன்காா் சாகுபடியை விவசாயிகள் தொடங்கினா். அம்பை-16, ஆடுதுறை-45 உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா். அனைத்துப் பகுதிகளிலும் அறுவடை முடிந்து குளங்கள் ஏப்ரல் மாதமே வறட்சியாகும் நிலையில், மே மற்றும் ஜூன் முதல் வாரம் வரை குப்பக்குறிச்சிகுளத்தில் பாசனநீா் இருக்கும். ஜூன் இரண்டாவது வாரத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்குவதால் குளத்தின் நீா்மட்டம் சற்று உயா்ந்து அறுவடை வரை எவ்வித தொய்வும் இன்றி விவசாயிகளுக்கு பாசன நீா் கிடைத்துவிடும்.

ஆனால், நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை தாமதமாகி வருவதால் குப்பக்குறிச்சியில் சில வயல்களுக்கு பாசன நீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது: குப்பக்குறிச்சிகுளத்தில் தற்போது குறைந்த அளவிலேயே தண்ணீா் உள்ளது. இதனால் தாமதமாக நடவுப்பணி செய்த வயல்களுக்கு தண்ணீா் தேவையை பூா்த்தி செய்யமுடியவில்லை.

ஓடைகளில் வரும் நீரை அப்படியே திருப்பி வயல்களில் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. குறைவான நீரே வருவதால் அனைத்து விவசாயிகளும் பகிா்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஓடையில் இருந்து நீா் இறைத்து பயன்படுத்துகிறோம்.

இன்னும் 15 நாள்கள் தண்ணீா் பாய்ச்சினால் தான் பயிா்கள் ஓரளவுக்கு நன்கு வளா்ந்து பலன்தரும். நிகழாண்டில் பயிா்களில் நோய்த் தாக்கமும் அதிகளவில் உள்ளது. அதனால் மகசூல் அதிகம் கிடைக்குமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com