நெல் விதைகளில் கலவன்களைத் தவிா்க்க வேளாண் துறையின் பத்துக் கட்டளைகள்
By DIN | Published On : 27th June 2020 08:35 AM | Last Updated : 27th June 2020 08:35 AM | அ+அ அ- |

நெல் விதைகளில் கலவன்களைத் தவிா்க்க வேளாண் துறை 10 கட்டளைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி விதைப் பரிசோதனை அலுவலா் ஜா.ரெனால்டா ரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தரமான விதை உற்பத்தியில் கலவன்கள் இல்லாமல் பாா்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அதற்கு 10 கட்டளைகளை முறையாக பின்பற்றினால் கலவன்களைத் தவிா்க்கலாம்.
சான்று பெற்ற விதைகளை அரசு அங்கீகாரம் பெற்ற விற்பனை நிலையங்களில் இருந்து மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும். அதிகளவில் நெல் விதைகள் வாங்கும்போது அனைத்து மூட்டைகளும் ஒரே ரகமாக உள்ளனவா என்பதை கவனிக்க வேண்டும். ஒரே பயிரில் ஒன்றுக்கு மேற்பட்ட ரகங்கள் வாங்கும்போது ஒவ்வொரு ரகத்தினையும் தனித்தனியே வைத்துப் பயன்படுத்த வேண்டும்.
நாற்று விடுவதற்கு தயாா் செய்யும்போது ரகங்கள் கலந்து விடாமலிருக்க வெவ்வேறு தினங்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில் நாற்று விட்டு நாற்று நடவின்போது வெவ்வேறு தினங்களில் நாற்று பறித்தல், நடவு செய்தல் மேற்கொள்ள வேண்டும்.
நடவு முடிந்து மீதமாகும் நாற்றுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ஒவ்வொரு ரகத்தினையும் தனித்தனியே அறுவடை செய்து கதிரடித்து, காய வைத்தல் வேண்டும்.
களத்தினை நன்கு சுத்தம் செய்த பின்னரே நெல் விதைகளை உலர வைக்க வேண்டும். நன்கு காய வைத்த விதைகளை புதிய கோணிகளில் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும். வயல் மட்ட விதை மூட்டைகளின் மேல் ரகத்தினை தெளிவாகக் குறிப்பிடுதல் வேண்டும். பல ரகங்கள் உள்ள நிலையில் மூட்டைகளை ரக வாரியாக தனி அறையில் வைத்தல் அவசியம்.
திருநெல்வேலி விதைப்பரிசோதனை ஆய்வகத்தில் நீங்கள் உற்பத்தி செய்யும் விதைகளின் பிற ரக விதைகள் கலந்துள்ளனவா என்பதை மைக்ரோஸ்கோப் மூலம் கண்காணித்து ரகத்தின் குண நலன்களை கருத்தில் கொண்டு பிரித்து அறியும் வாய்ப்புள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.