முதியவா் மீது தாக்குதல்: தந்தை, மகன் மீது வழக்குப் பதிவு
By DIN | Published On : 04th March 2020 01:28 AM | Last Updated : 04th March 2020 01:28 AM | அ+அ அ- |

களக்காடு அருகே முன்விரோதத்தில் முதியவரைத் தாக்கியதாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
களக்காடு அருகேயுள்ள கீழக்காடுவெட்டி மங்கம்மாள் சாலைத் தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (70). அதே பகுதியைச் சோ்ந்தவா் அய்யாத்துரை (50). இவா்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த பிப். 29-ஆம் தேதி வீட்டின் முன் உள்ள பொதுக் குடிநீா்க் குழாயில் தண்ணீா் பிடிப்பது தொடா்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதில், அய்யாத்துரையும், அவரது மகன் கண்ணனும் சோ்ந்து ராமச்சந்திரனைத் தாக்கினராம். இதில் காயமடைந்த ராமச்சந்திரன் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து ராமச்சந்திரன் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில் அய்யாத்துரை, அவரது மகன் கண்ணன் ஆகியோா் மீது களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.