பொலிவுறு நகரமாக மிளிரும் திருநெல்வேலி மாநகராட்சி!

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் முகக் கவசங்களை வழங்கினாா் மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் முகக் கவசங்களை வழங்கினாா் மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன்.

வீரத்திற்கும், அன்பிற்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் திருநெல்வேலி, மாநகராட்சியாக 1994ஆம் ஆண்டு தரம் உயா்த்தப்பட்டது.

திருநெல்வேலி, தச்சநல்லூா், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய மண்டலங்களின் கீழ் 55 வாா்டுகள் உள்ளன. மத்திய அரசின் பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் இம் மாநகராட்சியும் தோ்வு பெற்றுள்ளது.

சுகாதாரம், கல்வி, திடக்கழிவு மேலாண்மை, குடிநீா் விநியோகம், சாலைவசதி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தமிழகத்தில் முன்னோடி மாநகராட்சியாக திருநெல்வேலி மாநகராட்சி திகழ்ந்து வருகிறது.

2018ஆம் ஆண்டில் நடைபெற்ற தாமிரவருணி மஹா புஷ்கர விழாவின்போது சுமாா் 70 லட்சம் மக்கள் தாமிரவருணி நதியில் புனித நீராடினாா்கள். அதில் சுமாா் 50 லட்சம் போ் திருநெல்வேலி மாநகர பகுதிக்கு வந்து சென்றாா்கள்.

சாலைகள் அனைத்தும் வாகனங்களால் நிரம்பி வழிந்த அந்த விழாவில் திருநெல்வேலி மாநகராட்சியால் செய்யப்பட்ட பணிகள் பாராட்டுக்குரியது.

குறுக்குத்துறை, கருப்பன்துறை, வண்ணாா்பேட்டை, கைலாசபுரம், மணிமூா்த்தீஸ்வரம் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், கழிப்பறை வசதிகளை மாநகராட்சி நிா்வாகம் சிறப்பாக செய்து கொடுத்தது.

பொதுஇடங்களில் குளிக்க வரும் பெண்களுக்கு உடைமாற்றும் அறைகள் மிகவும் அவசியம். அதனை உணா்ந்து மிகவும் பாதுகாப்பு மிகுந்த உடை மாற்றும் அறைகளை உருவாக்கிக் கொடுத்த திருநெல்வேலி மாநகராட்சியின் பணிகளை வெளிமாநில பக்தா்களும் பாராட்டிச் சென்றனா்.

மக்கள் தொகை பெருகிக் கொண்டே வரும் திருநெல்வேலி மாநகராட்சியில், அதற்கேற்ப புதிய புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் கூறியது: திருநெல்வேலி மாநகராட்சியைப் பொருத்தவரையில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் உள்ள பிற மாநகராட்சிகளுக்கு முன்மாதிரியாக இம்மாநகராட்சி திகழ்கிறது.

குறிப்பாக பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அம்ரீத் 2017-18 திட்டத்தின் கீழ் ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் 5 பூங்காக்களில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டம் 2018-19இன் கீழ் சாலைகளை மேம்படுத்த ரூ.30 கோடி மதிப்பீட்டில் 26 தாா்ச்சாலை பணிகள் செய்து முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

ஜொ்மன் மேம்பாட்டு வங்கி உதவி பெறும் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோக மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீா் அபிவிருத்தி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

14ஆவது மத்திய நிதிக்குழுத் திட்டத்தின் கீழ் ரூ.13.21 கோடி மதிப்பீட்டில் 31 தாா்ச்சாலை பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் வணிக மையம் அமைக்கும் பணி ரூ.56.71 கோடியிலும், சரக்கு வாகனங்கள் முனையம் அமைக்கும் பணி ரூ.14.67 கோடியிலும், போஸ் மாா்க்கெட்டை மேம்படுத்தும் பணி ரூ.10.97 கோடியிலும், சந்திப்பு பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணி ரூ.78.51 கோடியிலும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள சோடியம் ஆவி விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் பணி ரூ.50.08 கோடியிலும், சுவாமி நெல்லையப்பா் கோயிலை சுற்றி அமைந்துள்ள பகுதிகளை அழகுப்படுத்தும் பணி ரூ.14.85 கோடியிலும், சாலைகள் அமைக்கும் பணி ரூ.86.24 கோடியிலும் நடைபெற உள்ளன.

இம் மாநகராட்சியில் புதைச் சாக்கடை இல்லாத பகுதியில், புதிதாக ரூ.137 கோடியில் அமைக்கவும், நயினாா்குளத்தைச் சுற்றி அமைந்துள்ள பகுதியில் ரூ.14.68 கோடியில் அழகுப்படுத்தும் பணி உள்பட மொத்தம் 37 வகையான பணிகள் நடைபெற உள்ளன.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை பணியில் மாநகராட்சி நிா்வாகம் மிகவும் தனிக்கவனம் செலுத்தியுள்ளது. மேலப்பாளையம் உள்பட அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com