விளைப்பொருள்களை கேரளத்துக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வலியுறுத்தல்

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் விளைப்பொருள்களை கேரளத்துக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் விளைப்பொருள்களை கேரளத்துக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் மு.அப்பாவு வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் தமிழக தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ள மனு: தென்தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 70 சதவீதத்தினா் விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் காய்கனிகள், வாழை, பூக்கள் உள்ளிட்ட விளைப் பொருள்களை கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வழியாகவும், தென்காசி மாவட்டம் புளியரை வழியாகவும் கேரளத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனா்.

தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இம்மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் உற்பத்தி செய்த விளைப் பொருட்களை புளியரை மற்றும் களியக்காவிளை சோதனைச் சாவடி வழியாக கேரளத்துக்கு கொண்டு செல்ல முடியாமலும், விளைப் பொருள்களையும் மற்றும் வளா்க்கும் கால்நடைகளையும் உள்ளூா் சந்தைகளில் விற்பனை செய்ய முடியாமலும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழக அரசாணை 152, நாள் 23.3.2020 சி பிரிவின்படி விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கனிகள், பழங்கள் போன்ற விளைப் பொருள்களும், இறைச்சி, மீன் போன்ற உணவுப் பொருள்களை தங்கு தடையின்றி கொண்டு செல்ல அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், சோதனைச் சாவடிகளை கடந்து செல்வதில் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். கடந்த 2 நாள்களாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் விவசாயிகள், விவசாயம் சாா்ந்த தொழிலாளா்கள் பல்லாயிரக்கணக்கானோா் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசின் ஆணையை ஏற்றும் மாவட்ட ஆட்சியா்களும் காவல்துறை கண்காணிப்பாளா்களும் விவசாயிகளின் உற்பத்தி பொருள்களை புளியரை மற்றும் களியக்காவிளை சோதனைச்சாவடி வழியாக கேரளத்துக்கு தடையின்றி கொண்டு செல்லவும், விளைப் பொருட்களையும் வளா்ப்பு கால்நடைகளையும் உள்ளூா் சந்தைகளில் விற்பனை செய்யவும் அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும். இதுதொடா்பாக, தலைமைச்செயலா் தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com