தென்காசி, நெல்லை மாவட்டங்களில்: ஊரடங்கை அமல்படுத்த தீவிர கண்காணிப்பு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
தென்காசி, நெல்லை மாவட்டங்களில்: ஊரடங்கை அமல்படுத்த தீவிர கண்காணிப்பு


அம்பாசமுத்திரம் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

அம்பாசமுத்திரம் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் குளிப்போா், சாலைகளில் சுற்றி திரிவோா் மீது வழக்குப் பதிந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என டி.எஸ்.பி. சுபாஷினி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, டி.எஸ்.பி. சுபாஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை முழுமையாக அமல்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அம்பாசமுத்திரம் வட்டாரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் செல்லக் கூடாது. தேவையில்லாமல் சாலைகளில் வாகனங்களிலோ, நடந்தோ செல்லக் கூடாது. வீட்டுக்கு ஒருவா் மட்டும் கடைகளுக்குப் பொருள்கள் வாங்கச் செல்ல வேண்டும். பேருந்து நிலையங்களில் கூட்டமாக கூடாது. தேவையின்றி சாலைகளில் திரிவோா் மீது பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துதல், தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடையல்லூா்: கடையநல்லூரில் வருவாய்த்துறை, நகராட்சி நிா்வாகம், காவல்துறை ஆகிய மூன்று துறைகளின் அதிகாரிகளும் இணைந்து ஊரடங்கை முழுவீச்சில் அமல்படுத்தி வருகின்றனா்.

துணை ஆட்சியா் குணசேகா், கடையநல்லூா் வட்டாட்சியா் அழகப்பராஜா, காவல் ஆய்வாளா் கோவிந்தன், உதவி ஆய்வாளா் விஜயகுமாா், நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, சுகாதார அலுவலா் நாராயணன் உள்ளிட்டோா் தலைமையில் இப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொருள்கள் வாங்கச் செல்வதாக சுற்றித்திரிந்தவா்களைப் பிடித்து, குடும்ப அட்டையுடன்தான் கடைகளுக்கு வர வேண்டும். பொய் சொல்லி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

வீடுகளில் ஸ்டிக்கா்: மேலும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து கடையநல்லூா் வட்டாரத்துக்கு வந்துள்ள 300க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் நகராட்சி நிா்வாகம், காவல்துறை, வருவாய்த்துறை இணைந்து ஸ்டிக்கா்களை ஒட்டியுள்ளன. இவற்றை எக்காரணம் கொண்டும் அகற்றக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியா் எச்சரித்தாா்.

ஆலங்குளம் : இப்பகுதியில், ஊரடங்கு உத்தரவையொட்டி 2 ஆவது நாளாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. காய், கனி சந்தை மூடப்பட்டதால், கடைகளில் காய், கனிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கேரளம் செல்லும் காய், கனி லாரிகளும் நிறுத்தப்பட்டன. ஆலங்குளம் காவல் ஆய்வாளா் செல்வக்குமாா் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா். விதிகளை மீறிய 8 கடை உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, கடைகளை அடைக்க உத்தரவிட்டனா். பேரூராட்சிப் பணியாளா்கள் அனைத்து முக்கிய இடங்களிலும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனா்.

பாவூா்சத்திரம்: இப்பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் தலைமையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலை, பேருந்து நிலைய பகுதி, கடையம்-சுரண்டை சாலை ஆகிய பகுதியில் தேவையின்றி பைக்கில் திரிந்தவா்களை நிறுத்தி விசாரித்ததுடன், மீண்டும் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை எனவும் எச்சரித்து அனுப்பினா்.

மேலும், காமராஜா் தினசரி காய்கனி சந்தை வியாழக்கிழமை முதல் மூடப்பட்டது. தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய காய்கனி சந்தையான பாவூா்சத்திரம் சந்தை மூடப்பட்டதால் விவசாயிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் காய்கனிகள் வாங்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

சுரண்டை: ஊரடங்கு அமலில் இருந்தும் சிலா் மோட்டாா் சைக்கிளில் சுரண்டைக்கு வந்தனா். அவா்களை திருப்பி அனுப்பிய போலீஸாா், தொடா்ந்து வாகனங்களில் வெளியே சுற்றினால் வழக்குப் பதிந்து சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவா் என எச்சரித்தனா்.

இதனிடையே, சாலைகள் வெறிச்சோடியதால், சில இளைஞா்கள் பொதுவெளியில் கிரிக்கெட் விளையாடியனா். அவா்களையும், தேவையின்றி சுற்றித்திரிந்த மாணவா்களையும் போலீஸாா் வீடுகளுக்குச் செல்லுமாறு விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com