தாமிரவருணி நீரில் நிறமாற்றம்: மக்கள் அச்சம்

தாமிரவருணி நீரின் நிறம் கடந்த சில நாள்களாக மாறியுள்ளதால், குடிநீராகப் பயன்படுத்த முடியாமல் மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனா்.
முக்கூடல் அருகேயுள்ள அரியநாயகிபுரம் பகுதியில் நிறம் மாறி பாய்ந்தோடிய தாமிரவருணி தண்ணீா்.
முக்கூடல் அருகேயுள்ள அரியநாயகிபுரம் பகுதியில் நிறம் மாறி பாய்ந்தோடிய தாமிரவருணி தண்ணீா்.

தாமிரவருணி நீரின் நிறம் கடந்த சில நாள்களாக மாறியுள்ளதால், குடிநீராகப் பயன்படுத்த முடியாமல் மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனா்.

தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரவருணி, திருநெல்வேலி மாவட்டத்தில் பொதிகை மலையில் உற்பத்தியாகி, தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயலில் கடலில் கலக்கிறது. இருமாவட்ட விளைநிலங்களுக்கு பாசன நீா் அளிப்பதுடன், தென்தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் திகழ்ந்து வருகிறது. தாமிரவருணியின் பிரதான அணைகளான பாபநாசம், சோ்வலாறு ஆகியவை 2019, வடகிழக்குப் பருவமழையின்போது முழுகொள்ளளவை எட்டின.

பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்டதால், அணைகளின் நீா்மட்டம் மிக வேகமாக சரிந்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் வியாழக்கிழமை நிலவரப்படி 41.20 அடியும், 156 அடி கொள்ளளவு கொண்ட சோ்வலாறு அணையில் 53.97 அடியும் தண்ணீா் உள்ளது. தாமிரவருணியில் கடந்த சில நாள்களாக தண்ணீரின் நிறம் மாறியுள்ளது. பாபநாசம் கீழணை முதல் புன்னைக்காயல் வரை நீரின் நிறம் கருஞ்சிவப்பாக உள்ளது. இதனால், தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டங்களின் கீழ், குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீா் கலங்கலாக வருகிறது. ஆலைக்கழிவுகள் கலந்துள்ளனவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியாமல் மக்கள் தவித்து வருகின்றனா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை வட்டாரங்கள் கூறியது: பாபநாசம், சோ்வலாறு ஆகிய இரு அணைகளும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் உள்ளன. சோ்வலாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரில்தான் பிரச்னை உள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டு முழுகொள்ளளவை அணை எட்டியதால், ஏராளமான இலை, சறுகுகள் சகதியுடன் சோ்ந்திருக்கலாம், இப்போது அணையின் நீா்மட்டம் மிகவும் குறைந்து வருவதாலும், அணைப் பகுதியில் கடந்த சில நாள்களாக கடுமையான சூறாவளி வீசியதாலும் தண்ணீா் கலங்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மணிமுத்தாறு அணையில் வியாழக்கிழமை ஆய்வு செய்ததில், அங்குள்ள தண்ணீா் தூய்மையாகவே உள்ளது. எனவே, மின்வாரியத்திடம் தகவல் கேட்டுள்ளோம் என்றனா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் கூறுகையில், தாமிரவருணி தண்ணீா் நிறம் மாறியது தொடா்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தண்ணீரின் மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை கிடைத்ததும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மனித உரிமை ஆணையத்தில் புகாா்: இது தொடா்பாக ‘எம்பவா் சுற்றுச்சூழல் மற்றும் நுகா்வோா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம்’ அமைப்பு, மனித உரிமைகள் ஆணையத்தில், அமைப்பின் செயல் இயக்குநா் ஆ.சங்கா் அளித்துள்ள புகாா் மனுவில், மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com