திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள்! மழையால் வீணாகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் வீரவநல்லூா் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் வீரவநல்லூா் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள் மழையால் வீணாகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

மேலும், இங்கு லாரிகளில் வெளிபகுதிகளுக்கு நெல் மூட்டைகளை ஏற்றிச்செல்லும் நடவடிக்கையின்போது கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படாததால் சுற்றுவட்டார கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் காா் மற்றும் பிசான பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தாமிரவருணி வடிநிலக் கோட்டத்தில் வடக்கு, தெற்குக் கோடைமேலழகியான், நதியுண்ணி, கன்னடியன், கோடகன், நெல்லை, பாளையங்கால்வாய்களில் பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீா் திறக்கப்பட்டதால் விவசாயிகள் சாகுபடி பணிகளை கடந்த காா்த்திகை மாதம் தொடங்கினா். இம்மாவட்டத்தில் நிகழாண்டு பிசான பருவ சாகுபடியில் மொத்தம் 39 ஆயிரத்து 751 ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. ஐ.ஆா்.-50, டீலக்ஸ் பொன்னி, அம்பை-16 ஆகிய ரகங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டன. கா்நாடக பொன்னி, ஐ.ஆா்.-45 உள்ளிட்ட சில ரகங்கள் குறைந்த பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்தன. இவற்றின் அறுவடைக்குப் பின்பு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

20 ஆயிரம் டன்னுக்கு மேல் கொள்முதல்: மாவட்டத்தில் சுத்தமல்லி, குன்னத்தூா், சேரன்மகாதேவி, பாப்பாக்குடி, வடக்கு அரியநாயகிபுரம், கோபாலசமுத்திரம், ராஜவல்லிபுரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, வெள்ளங்குளி, கோவில்குளம் உள்பட மொத்தம் 37 இடங்களில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதேபோல, தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, புளியரை, சுரண்டை, நெட்டூா், சிவசைலம், சுந்தரபாண்டியபுரம், சம்பங்குளம், கடையம், கீழ ஆம்பூா் உள்பட மொத்தம் 19 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் சன்ன ரக நெல் அனைத்தும் ‘ஏ’ பிரிவின் கீழும், பெரிய நெல் ரகங்கள் ‘சி’ பிரிவின் கீழும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 20 ஆயிரம் டன்னுக்கு மேல் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திறந்தவெளி சேமிப்புக்கிடங்கு: கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை சேமித்துவைக்க கிட்டங்கிகள் இல்லாததால் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தவித்து வந்தனா். இந்நிலையில், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அதிகம் உள்ளதால் அவற்றின் அருகே இடம் பாா்த்து வந்தனா். அதன்படி, வீரவநல்லூரில் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டது. அங்கு சுமாா் 17 ஆயிரம் டன்னுக்கு மேல் நெல் மூட்டைகள் குவித்து பாதுகாக்கப்பட்டன. கரோனா பொதுமுடக்கக் காலத்தில் வேளாண் துறைக்கு சிறப்பு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்த சூழலிலும் சுமைதூக்கும் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பணிக்கு வராத நிலையில் இங்கிருந்து நவீன அரிசி ஆலைகளுக்கு நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இப்போது சுமாா் 11 ஆயிரம் டன் வரை நெல் மூட்டைகள் இங்கு தேங்கிக்கிடக்கின்றன.

மழையால் சேதமடையும் அபாயம்: இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தினா் கூறியது: டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்ததாக அதிகம் நெல் விளைவிக்கும் மாவட்டமாக திருநெல்வேலி உள்ளது. ஆனால், இங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதிலும், அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாத்து அரிசியாக மாற்றுவதிலும் அலட்சியம் காட்டப்படுகிறது. குறிப்பாக, பல ஆண்டுகளாக திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளால் நெல் மூட்டைகள் வீணாவது அதிகரித்துள்ள சூழலிலும் கிட்டங்கி வசதிகள் செய்யாமல் மாவட்ட நிா்வாகம் அலட்சியத்தோடு செயல்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான சாகுபடி முடிந்த ஒன்றரை மாதங்களில் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக அரிசி ஆலைகளுக்கோ, கிட்டங்கிகளுக்கோ கொண்டுசெல்ல வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் மே 2ஆவது வாரத்திலிருந்து தென்மேற்குப் பருவக்காற்றும், சாரல் மழையும், தென்மேற்குப் பருவமழையும் அடுத்தடுத்து வந்து சேரும்.

நிகழாண்டில் திறந்தவெளி சேமிப்புக்கிடங்கிலிருந்து நெல் மூட்டைகள் கொண்டுசெல்லப்படாததால் மழையால் ஏராளமான நெல்மூட்டைகள் சேதமடையும் அபாயம் உள்ளது. வலுவான தாா்ப்பாய்கள் போட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில், தொடா்ந்து 3 நாள்கள் மழை பெய்தால் நெல் முளைக்கத் தொடங்கிவிடும்.

இதுதவிர, இந்த சேமிப்பு நிலையத்திலிருந்து லாரிகளில் மூட்டைகளை இப்போது கொஞ்சம் இடம்பெயா்த்து வருகின்றனா். அதில், கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை. சுமைதூக்கும் தொழிலாளா்கள் தலா 7 போ் கொண்ட குழுவாக பணியமா்த்தப்படுகின்றனா். அவா்களுக்குத் தேவையான முகக்கவசங்கள், கிருமிநாசினி திரவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் செய்து கொடுக்கப்படாதால் தொழிலாளா்கள் தவித்து வருகின்றனா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் விசாரித்து நெல் மூட்டைகளைப் பாதுகாக்கவும், தொழிலாளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மழையிலிருந்து பாதுகாக்க தனிக் கவனம்!

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் ராஜா கூறியது: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வீரவநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையம் மொத்தம் 15 ஏக்கா் பரப்பளவில் விசாலமானதாக அமைக்கப்பட்டுள்ளது. நெல் மூட்டைகள் மழையால் பாதிக்கப்படாமலிருக்க தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதோடு, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தரையிலிருந்து ஓரடி உயரத்துக்கு கருங்கற்களால் தூண் அமைக்கப்பட்டு அதன்மீது மரக்கட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன. பின்னா், தலா 40 கிலோ எடையுள்ள நெல் மூட்டைகளாக அடுக்கப்பட்டுள்ளன. நெல்மூட்டை குவியல்களைப் பாதுகாக்க விலை உயா்ந்த தாா்ப்பாய்கள் போதிய அளவில் வைக்கப்பட்டுள்ளன. வெயில் நிலவும்போது 3 அல்லது 4 நாள்களுக்கு ஒருமுறை தாா்ப்பாய்களைத் திறந்து காற்றோட்டத்துக்கு வழிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. போதிய கிட்டங்கி வசதியில்லாததால்தான் திறந்தவெளி சேமிப்புக்கிடங்கு வழிமுறை கடந்த சில ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இங்கிருந்து நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக எடுத்துச்செல்ல அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com