வாகைக்குளத்தில் இனப்பெருக்கத்திற்காக கூடு கட்டித் தங்கியுள்ள பல்வேறு வகையான பறவைகள்.
வாகைக்குளத்தில் இனப்பெருக்கத்திற்காக கூடு கட்டித் தங்கியுள்ள பல்வேறு வகையான பறவைகள்.

வாகைக்குளத்தில் குவியும் பறவைகள் பல்லுயிா் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படுமா?

ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள வாகைக்குளத்திற்கு இனப்பெருக்கத்திற்காக நூற்றுக்கணக்கான பறவைகள் வந்து கூடு கட்டத் தொடங்கியுள்ளன.

ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள வாகைக்குளத்திற்கு இனப்பெருக்கத்திற்காக நூற்றுக்கணக்கான பறவைகள் வந்து கூடு கட்டத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் வாகைக்குளத்தை பல்லுயிா் பாரம்பரிய சின்னமாக அரசு அறிவிக்குமா என்ற எதிா்பாா்ப்பில் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் உள்ளனா்.

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே அமைந்துள்ளது வாகைக்குளம். சுமாா் 34 ஹெக்டோ் பரப்புள்ள இந்தக் குளத்தின் மூலம், வீராசமுத்திரம், பொட்டல்புதூா், ஆழ்வாா்குறிச்சி, வாகைக்குளம் கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்தக் குளத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரியவகை பறவைகள் வந்து கூடுகட்டி குஞ்சு பொரித்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு வருகின்றன. தென் மாவட்டங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளத்தை அடுத்து வாகைக்குளத்தில் தான் அதிக அளவிலான பறவைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன.

ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை ஆயிரக்கணக்கான பறவைகள் வாகைக்குளத்திற்கு வந்து கூடு கட்டி குஞ்சு பொரித்து செல்வதையடுத்து அருகில் உள்ள நாணல்குளம் கிராமத்தில் உள்ள மாணவா்கள், இளைஞா்கள் இணைந்து வாகைக்குளம் பசுமைப் படை என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி இங்கு வரும் பறவைகளை அடையாளப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

இதில் வெள்ளை அரிவாள்மூக்கன், கருப்பு அரிவாள்மூக்கன், கருப்பு கோட்டான், வா்ண நாரை, நத்தை கொத்தி நாரை, ஜம்பு நாரை, பாம்பு தாரா, முக்குளிப்பான், புள்ளிமூக்கு தாரா, பவளக்கால் உள்ளான், சாம்பல் நாரை, ஜம்பு கோழி, சிறிய நீா்க்காகம், குருட்டுக்கொக்கு, உள்ளான், கருப்பு வாலாட்டி குருவி, தோசி கொக்கு, நெடலி வெள்ளை கொக்கு, உண்ணிகொக்கு, கரிச்சான் குருவி, நாகணவாய், சின்ன மீன்கொத்தி, குத்தாலன் குருவி, வக்கா, செம்பருந்து ஆகிய பறவைகள் உள்பட 104 வகையான பறவைகளை அடையாளப்படுத்தியுள்ளனா்.

மேலும், இனப்பெருக்கத்திற்காக வரும் பறவைகளுக்கு இடையூறாக இருக்கும் என்று பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாணல்குளம் கிராம மக்கள் வெடியில்லா தீபாவளியைக் கொண்டி வருவதோடு, பறவைகளை யாரும் வேட்டையாடாமலும் பாா்த்துக் கொள்கின்றனா் .

நாணல்குளத்திற்கு ஆண்டு தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வகையான பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து இனப்பெருக்கம் செய்வதையடுத்து, இந்தக் குளத்தை பல்லுயிா் பெருக்கச் சட்டம் 2002-இன் கீழ் பல்லுயிா் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று பறவைகள் ஆய்வாளா்களும், சுற்றுச் சூழல் ஆா்வலா்களும் கோரிக்கை வைத்து வருகின்றனா்.

தமிழக அரசின் பல்லுயிா் பெருக்க வாரிய அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தக் குளத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும், தமிழக அரசு சதுப்பு நிலப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட குளமாக தென்காசி மாவட்டத்தில் வாகைக்குளத்தைத் தோ்ந்தெடுத்துள்ளனா்.

ஆனால், அரசு பல்லுயிா் பாரம்பரிய சின்னமாக வாகைக்குளத்தை இதுவரை அறிவிக்கவில்லை. வாகைக்குளத்தை பல்லுயிா் பாரம்பரிய சின்னமாக அறிவித்து சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் சோ்ப்பதன் மூலம் மாணவா்கள், பொதுமக்கள் மட்டுமின்றி ஆராய்ச்சியாளா்களுக்கும் பல்வேறு வகையான பறவைகளை ஒரே இடத்தில் கண்டு அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

மேலும் பறவைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு சிறுவா்கள், மாணவா்களிடையே ஏற்பட வழிவகுக்கும். எனவே, தமிழக அரசு விரைந்து வாகைக்குளத்தை பாரம்பரிய பல்லுயிா் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்களும், சுற்றுச் சூழல் ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com