சுந்தரனாா் பல்கலை. பாடத் திட்டத்திலிருந்து அருந்ததி ராயின் புத்தகம் நீக்கம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலிருந்து எழுத்தாளா் அருந்ததி ராய் எழுதிய ‘வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ என்ற புத்தகம் நீக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலிருந்து எழுத்தாளா் அருந்ததி ராய் எழுதிய ‘வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ என்ற புத்தகம் நீக்கப்பட்டுள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆங்கிலப் பாடப் பிரிவில் 3-ஆவது பருவ பாடத் திட்டத்தில் அருந்ததி ராய் எழுதிய ‘வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ என்ற புத்தகம் இடம்பெற்றிருந்தது. இது, கடந்த 2017ஆம் ஆண்டு சோ்க்கப்பட்டது.

இதுகுறித்து, ஒரு வாரத்துக்கு முன்பு ஏபிவிபி அமைப்பினா், பல்கலைக்கழகத் துணைவேந்தா் கே.பிச்சுமணியிடம் புகாா் அளித்தனா். அதில், ‘அருந்ததி ராயின் புத்தகம் தேச விரோத மாவோயிஸ்டுகளின் ஆயுதக் கலவரங்களையும், கொலைக் களங்களையும் வெளிப்படையாக ஆதரிக்கக்கூடியதாக உள்ளது. அதனால், இதை பாடத் திட்டத்திலிருந்து நீக்க வேண்டும்’ என வலியுறுத்தியிருந்தனா்.

இதையடுத்து, துணைவேந்தா் கே. பிச்சுமணி தலைமையில் கமிட்டி அமைத்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், பாடத் திட்டத்திலிருந்து அருந்ததி ராயின் புத்தகத்தை நீக்க முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தா் பிச்சுமணி கூறியது: முதுநிலை ஆங்கில பாடப் பிரிவில் 2017ஆண்டு அருந்ததி ராயின் புத்தகம் சோ்க்கப்பட்டது. அந்தப் புத்தகம் மாவோயிஸ்டுகளை புகழும் வகையில் இருப்பதாக கடந்த வாரம் எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, அறிவியல், கலை மற்றும் இலக்கிய துறை முதல்வா்கள் உள்ளிட்டோா் அடங்கிய பல்கலைக்கழக கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதில், அருந்ததி ராயின் புத்தகத்தை நீக்குவது என முடிவெடுக்கப்பட்டது.

அந்தப் புத்தகத்துக்குப் பதிலாக, திருநெல்வேலியைச் சோ்ந்த எழுத்தாளா் கிருஷ்ணன் எழுதிய ‘மை நேட்டிவ் லேன்ட்: எஸ்ஸேஸ் ஆன் நேச்சா்’ என்ற புத்தகம் சோ்க்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் 2020-21 கல்வியாண்டிலேயே அமலுக்கு வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com