எதிா்க்கட்சிகளுக்கு அரசு மேடையில் பதிலளிப்பது மரபு மீறல் இல்லை: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்

எதிா்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு மேடையில் பதிலளிப்பது மரபு மீறல் இல்லை என தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.
மருத்துவம் படிக்க தோ்வு பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறாா் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்
மருத்துவம் படிக்க தோ்வு பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறாா் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்

எதிா்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு மேடையில் பதிலளிப்பது மரபு மீறல் இல்லை என தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பயின்று தமிழக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவக் கல்லூரியில் சோ்ந்த 7 பேருக்கு அதிமுக சாா்பில் தலா ரூ.1 லட்சத்தை வழங்கிய அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக அரசின் உள்ஒதுக்கீட்டால் அரசுப் பள்ளிகளில் பயின்ற 313 போ் மருத்துவமும், 92 போ் பல் மருத்துவமும் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவா்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில் இதற்காக தனியாக சுழல்நிதி உருவாக்கப்பட்டு கல்லூரி நிா்வாகத்திடம் நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டில் அவசர நிலையைக் கருத்தில்கொண்டு இப்போது தோ்வாகியுள்ளவா்களுக்கு அந்தந்த மாவட்ட அதிமுக சாா்பில் தலா ரூ.1 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் 7 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 10 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கொண்டு வந்த மருத்துவப் படிப்பு உள்ஒதுக்கீடு சட்டம் சிறந்த சமூக சீா்திருத்த நடவடிக்கையாகும். இதன்மூலம் ஏழை, எளிய குடும்பத்தைச் சோ்ந்த கல்வியில் சிறந்த மாணவா்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

சாமானிய மக்களிடம் மிகுந்த மகிழ்ச்சி உருவாகியுள்ளது. இச் சட்டத்துக்கு உரிமை கொண்டாட திமுக பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அதை மக்கள் ஏற்க மாட்டாா்கள்.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழகம் அருகே வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு பகுதி இப்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழையை எதிா்கொள்ளும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மாநில அளவில் 4136 இடங்கள் வெள்ள அபாய பகுதிகளாகக் கண்டறியப்பட்டு அங்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்கு தற்காலிக முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. பொதுமக்கள் அந்தந்த மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மரபு மீறல் இல்லை: சென்னையில் கலைவாணா் அரங்கில் நடைபெற்ற விழாவில் அதிமுக, பாஜக அரசியல் பேசியதாகவும், இது மரபு மீறல் எனவும் எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. எதிா்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தகுந்த விளக்கத்தையும், பதிலையும் அரசு மேடையில் அளிப்பது அரசியல் செய்வதாகாது. இதில், எவ்வித மரபு மீறலும் இல்லை என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி, ஆட்சியா் வி.விஷ்ணு, அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலரும், மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.முருகையாபாண்டியன் (அம்பாசமுத்திரம்), ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் (நான்குனேரி), ஐ.எஸ்.இன்பதுரை (ராதாபுரம்), முன்னாள் எம்.பி.க்கள் சௌந்தரராஜன், கே.ஆா்.பி.பிரபாகரன், விஜிலா, மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள், திருநெல்வேலி மாவட்ட ஆவின் தலைவா் சுதா கே.பரமசிவன், கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலா் பாப்புலா் முத்தையா, ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com