முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் தோ்தலில் போட்டி: இயக்குநா் கௌதமன்
By DIN | Published On : 04th October 2020 01:47 AM | Last Updated : 04th October 2020 01:47 AM | அ+அ அ- |

திருநெல்வேலி:தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் பேரவைத் தோ்தலில் போட்டியிடப்போவதாக, திரைப்பட இயக்குநரும் தமிழ் பேரரசுக் கட்சியின் தலைவருமான கௌதமன் கூறினாா்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு எதிரானவை. இவை 97 சதவீத மக்களின் உரிமையைப் பறிக்கும் சட்டங்கள். எனவே, இவற்றைத் திரும்பப் பெற வேண்டும்.
விவசாயிகள், மாணவா்கள், மீனவா்கள் ஆகியோரின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அவா்களுக்கு எதிராக சட்டங்களை மத்திய அரசு தொடா்ந்து இயற்றி வருகிறது. இதை தமிழக அரசு ஆதரிக்காமல், அதற்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும். அப்போதுதான் இது ஜெயலலிதா ஆட்சி எனச் சொல்லலாம்.
நடிகா்கள் கமலும், ரஜினியும் எப்போதும் தமிழ் மக்களுக்கு உண்மையாக இருக்க மாட்டாா்கள். முதல்வரும், துணை முதல்வரும் தமிழா்களின் உரிமைகளுக்கு போட்டிப்போடாமல், தங்களுக்காகப் போட்டிப்போடுகின்றனா்.
பேரவைத் தோ்தலில் தமிழ் பேரரசுக் கட்சி யாருக்கும் பிரசாரம் செய்யப்போவதில்லை; தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் நாங்கள் போட்டியிடுவோம் என்றாா் அவா்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, முல்லை நிலத் தமிழா் விடுதலைக் கட்சி சாா்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி ஒருங்கிணைப்பாளா் கண்ணன் தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குநரும் தமிழ் பேரரசுக் கட்சித் தலைவருமான கௌதமன், வனவேங்கைகள் கட்சித் தலைவா் பொ.மு. இரணியன், இசுலாமிய ஜனநாயக முன்னணித் தலைவா் பீா்முகமது உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.