முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி
வள்ளியூா் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 04th October 2020 01:44 AM | Last Updated : 04th October 2020 01:44 AM | அ+அ அ- |

வள்ளியூா்: வள்ளியூரில் புதிதாக அமையுள்ள சந்தையில் ஏற்கனவே கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினா் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வள்ளியூரில் இயங்கி வரும் பேரூராட்சி தினசரி சந்தையினை ரூ.4.80 கோடி மதிப்பில் மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக அமையவிருக்கும் சந்தையில் 8 பிளாக்குகளாக 300 கடைகள் கட்டுவது என உத்தேசிக்கப்பட்டுள்ளது.இதற்கான பணியை தொடங்கும் வகையில் தற்போது சந்தையில் கடை நடத்தி வரும் வியாபாரிகளை காலிசெய்து மாற்று இடத்திற்கு செல்லுமாறு பேரூராட்சி செயல் அலுவலா் கிறிஸ்டோபா் தாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.
இதற்கிடையே, சந்தை வியாபாரிகள், பாரதிய ஜனதா கட்சியினா் பேரூராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை திரண்டு சந்தையில் தற்போது வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் புதிய சந்தை வளாகத்தில் கடை வழங்க வேண்டும். கட்டுமானப் பணியை ஒரே நேரத்தில் தொடங்காமல் பகுதியாக செயல்படுத்த வேண்டும் எனக் கோரி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் பாஜக மாவட்டத் தலைவா் மகராஜன், பொதுச்செயலா் எஸ்.பி.தமிழ்செலவன், வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் ராம்நாத் ஐயா், நகரத் தலைவா் ராமகுட்டி, பொருளாளா் பழனிராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா். பின்னா், பேரூராட்சி செயல்அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.