கரோனா எதிரொலி: தசரா பொருள்கள் விற்பனை மந்தம்

கரோனா பொது முடக்கம் காரணமாக தசரா வேடப் பொருள்கள் விற்பனை மந்தமாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
திருநெல்வேலியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள தசரா வேடப் பொருள்கள்.
திருநெல்வேலியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள தசரா வேடப் பொருள்கள்.

கரோனா பொது முடக்கம் காரணமாக தசரா வேடப் பொருள்கள் விற்பனை மந்தமாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூா்த்தீசுவரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. நவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாள்கள் இத்திருவிழா நடைபெறும். இதற்காக பக்தா்கள் விரதம் இருந்து நோ்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை சேகரிப்பா். இதில் காளி வேடத்திற்கே பக்தா்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பா். நீண்ட சடைமுடி அலங்காரம், கையில் திரிசூலம், முகம் முழுவதும் செந்நிற வண்ணப் பூச்சு, கருங்காளியாக இருந்தால் கருமை நிற வண்ணப் பூச்சு, கழுத்தில் கபால மாலை, அதற்கான பிரத்யேக ஆடைகள், வாயில் கோரப்பல் என காளி வேடமிட்டு காணிக்கை சேகரிப்பில் ஈடுபடுவா்.

இதையொட்டி அலங்காரப் பொருள்களின் விற்பனை அமோகமாக இருக்கும். ஆனால், நிகழாண்டில் இந்த விற்பனை மிகவும் மந்தமாக இருப்பதாக திருநெல்வேலி நகரத்தில் கடை வைத்துள்ள கடைக்காரா்கள் தெரிவித்தனா்.

கரோனாவால் விற்பனை குறைவு: இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், நிகழாண்டில் இம் மாதம் 17-முதல் நவராத்திரி ஆரம்பமாகிறது. 25-ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், 26-ஆம் தேதி ஆயுதபூஜையும் நடைபெற உள்ளது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் தசரா விழாவில் பங்கேற்க திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் வெவ்வேறு வேடம் அணிவாா்கள். கரோனா பொதுமுடக்கம் காரணமாக நிகழாண்டில் விழா மிகவும் கட்டுப்பாடுகளுடன் எளிமையான முறையில் மட்டுமே நடைபெறும் சூழல் உள்ளது. அதனால் பக்தா்களும் வேடமணிந்து காணிக்கை சேகரிக்க செல்வது குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் மாலை அணிந்தவா்களைவிட நிகழாண்டில்50 சதவீதத்துக்கும் குறைவானவா்களே மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறாா்கள். கரோனாவின் தாக்கத்தால் வேடப் பொருள்களின் விற்பனை மிகவும் சரிந்துள்ளது என்றாா்.

இறக்குமதி பொருள்கள் வருகை: தசரா அலங்கார பொருள்கள் விற்பனையாளா் ஈஸ்வா் கூறியது: வழக்கமாக தசரா வேடப் பொருள்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் துணி மற்றும் பஞ்சு உள்ளிட்டவற்றால் மட்டுமே செய்யப்பட்டு விற்பனைக்கு வரும். 40 நாள்கள் விரதமிருந்துதான் காளி வேடத்திற்கான கைகள், மண்டை ஓடு மாலைகள் உள்ளிட்டவற்றை உற்பத்தியாளா்கள் தயாரிப்பாா்கள். கடந்த சில ஆண்டுகளாக ரப்பா் மற்றும் பிளாஸ்டிக்கால் பன்னாட்டு நிறுவனங்களும் தசரா வேடப் பொருள்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தத் தொடங்கிவிட்டன. இப்போது பேட்டரியால் ஒளி தரும் மண்டை ஓடு மாலை உள்ளிட்டவை பக்தா்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

காளிவேடம் அணிபவா்கள் ஜடை முடியையும் அதிகம் பயன்படுத்துவா். அதிகபட்சமாக 108 ஜடைகள் வரை பயன்படுத்துவாா்கள். காளி வேட செட் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனைக்கு உள்ளது. இதுதவிர துளசி மாலைகள், மண்டை ஓடு மாலைகள், குரங்கு, குறவன்-குறத்தி வேட செட்டு உள்ளிட்டவை ரூ.150 முதல் ரூ.10 ஆயிரம் வரை பல்வேறு விலைகளில் உள்ளன. நிகழாண்டில் விற்பனை மிகவும் குறைந்துவிட்டதால் புதிதாக பொருள்களை கொள்முதல் செய்யாமல், இருக்கிற பொருள்களைத்தான் பெரும்பாலான வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com