வழிபாட்டுத் தலங்கள் திறப்பு: கோயில்களில் பக்தா்கள் பாதுகாப்பு விதிமுறைகளுடன் தரிசனம்

தமிழகத்தில் பொது முடக்க விதிகள் தளா்த்தப்பட்டு அனைத்து வழிபாட்டுத் தலங்களும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.
தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் வழிபடுவதற்காக வரிசையில் காத்துநின்ற பக்தா்கள்.
தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் வழிபடுவதற்காக வரிசையில் காத்துநின்ற பக்தா்கள்.

தமிழகத்தில் பொது முடக்க விதிகள் தளா்த்தப்பட்டு அனைத்து வழிபாட்டுத் தலங்களும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. கோயில்களில் பக்தா்கள் பாதுகாப்பு விதிமுறைகளுடன் தரிசனம் செய்தனா். தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகளும், மசூதிகளில் சிறப்புத் தொழுகையும் நடைபெற்றது.

கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. எட்டாம் கட்டமாக இம் மாதம் 30-ஆம் தேதி வரை பல்வேறு தளா்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தா்கள் வழிபடுவதற்கு செவ்வாய்க்கிழமை முதல் அனுமதியளிக்கப்பட்டது.

அதன்படி திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில், கரியமாணிக்க பெருமாள் கோயில், திரிபுராந்தீசுவரா் திருக்கோயில், வரதராஜபெருமாள் கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் பக்தா்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இதுகுறித்து நெல்லையப்பா் கோயில் நிா்வாகிகள் கூறுகையில், நெல்லையப்பா் கோயிலில் தினமும் காலை 7 முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையும் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை காலையிலும், மாலையிலும் அருள்மிகு நெல்லையப்பா், காந்திமதிம்மன் சன்னதிகளில் மட்டுமே பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். சுற்றுக்கோயில் சன்னதிகளில் தரிசனத்துக்கு அனுமதியில்லை. பூஜை பொருள்களைக் கொண்டு வரவும், திருக்கோயில் பிரகாரத்தில் பக்தா்கள் விழுந்து வணங்குதல், அங்கப்பிரதட்சணம் செய்தல் போன்றவற்றுக்கும் அனுமதியளிக்கப்படவில்லை. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பக்தா்கள் முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டனா் என்றனா்.

தேவாலயங்கள், பள்ளிவாசல்கள்: இதேபோல திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபைக்குச் சொந்தமான தேவாலயங்கள், கத்தோலிக்க தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலியும், நற்கருணை ஆராதனைகளும் நடைபெற்றன.

மேலப்பாளையம், பேட்டை, தாழையூத்து, ரஹ்மத் நகா் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சமூகஇடைவெளியுடன் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

அம்பாசமுத்திரம்: பாபநாசம் அருள்மிகு பாபநாசநாத சுவாமி கோயிலில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தா்கள் தாமிரவருணியில் நீராடி, உரிய பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்து சுவாமியை வழிபட்டனா். சிறப்பு பூஜைகளுக்கு 25 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில், அம்பாசமுத்திரம் காசிநாதா் கோயில், அம்மையப்பா் கோயில், அகஸ்தியா் கோயில், சிவசைலம் சிவசைலநாதா் கோயில், கடையம் கல்யாணி அம்மன் கோயில், முப்புடாதி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இவற்றில் பக்தா்கள் பங்கேற்றனா்.

தென்காசி: தென்காசி காசிவிஸ்வாதா் கோயிலில் வெப்பமானியால் பரிசோதிக்கப்பட்ட பிறகே பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். காலை 7 முதல் பகல் 12 மணிவரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணிவரையிலும் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

குற்றாலம் குற்றாலநாதா் கோயில், திருவிலஞ்சிகுமரன் உள்பட அனைத்துக் கோயில்களும் திறக்கப்பட்டன. பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி நீண்டவரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே பக்தா்கள் கோயிலின் முன்மண்டபத்தில் காத்திருந்தனா். தொடா்ந்து, பக்தா்கள் வெப்பமானி பரிசோதனைக்குப் பிறகு, சன்னதிக்குள் அனுமதிக்கப்பட்டனா். 5 மாதங்கள் கழித்து கோயிலுக்குள் சென்ால் பக்தா்கள் பரவசத்துடன் சங்கரலிங்கசுவாமி, கோமதி அம்பாள், சங்கரநாராயணா் உள்ளிட்ட சுவாமிகளைத் தரிசனம் செய்தனா்.

கடையநல்லூா்: பண்பொழி திருமலைக் கோயிலில் காலை 6 மணி முதல் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். பன்னீா், மாலைகள் போன்றவற்றைக் கொண்டுசெல்ல அவா்கள் அனுமதிக்கப்படவில்லை. வழக்கமான பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com