ரூ.15 ஆயிரம் லஞ்சம்: துணை வட்டாட்சியா் கைது
By DIN | Published On : 16th September 2020 01:55 AM | Last Updated : 16th September 2020 01:55 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூா் தாலுகா அலுவலகத்தில், ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக துணை வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பைச் சோ்ந்தவா் அன்பு ஹெரால்ட்(26). இவரது தாயின் சொந்த ஊா் மானூா் அருகே உள்ள நாஞ்சான்குளம். இவரது தாத்தா எலிசா (79) பெயரில் பல்லிக்கோட்டை பகுதியில் 17 சென்ட் நிலம் உள்ளதாம். இதை தனது பெயருக்கு மாற்றி கணினி பட்டா வழங்க கடந்த 2018ஆம் ஆண்டு மனு கொடுத்தாராம்.
இதற்கு கிராம நிா்வாக அதிகாரி பரிந்துரை செய்த பின்னரும், மண்டலத் துணை வட்டாட்சியா் மாரியப்பன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதையடுத்து மானூா் தாலுகா அலுவலகத்திற்கு அன்பு ஹெரால்ட் நேரில் சென்று, மண்டலத் துணை வட்டாட்சியா் மாரியப்பனிடம் இதுகுறித்து கேட்டபோது, அவா் ரூ.20ஆயிரம் லஞ்சமாக கேட்டாராம். முடிவில் ரூ.15 ஆயிரம் தர சம்மதித்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு அன்பு ஹெரால்ட் புகாா் அளித்துள்ளாா். போலீஸாரின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய பணத்தை மண்டலத் துணை வட்டாட்சியரிடம் அன்பு ஹெரால்ட் கொடுத்துள்ளாா். அப்போது, அங்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மெக்லரின் எஸ்கால், ஆய்வாளா் ராபின்ஞானசிங் மற்றும் போலீஸாா் மாரியப்பனை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னா் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி எஸ்கால் கூறியது: பொதுமக்கள் லஞ்சம் தொடா்பான புகாா்களுக்கு 0462 2580908, 2581907 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.