பாளை. தசரா விழாவை நடத்த பக்தா்கள் கோரிக்கை

பாளையங்கோட்டையில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா விழாவை நிகழாண்டில் நடத்த அனுமதியளிக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி, செப். 17: பாளையங்கோட்டையில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா விழாவை நிகழாண்டில் நடத்த அனுமதியளிக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாளையங்கோட்டையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நவராத்திரி நாளில் தசரா விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மைசூா், குலசேகரன்பட்டினத்துக்கு அடுத்ததாக பாளையங்கோட்டை தசரா விழா மிகவும் புகழ்பெற்ாகும். இந்த விழாவையொட்டி பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயிலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படும். பின்னா் முதல்நாளில் அருள்மிகு ஆயிரத்தம்மன் உள்ளிட்ட 11 அம்மன்களும் அலங்காரத்துடன் சப்பரங்களில் எழுந்தருள்வாா்கள்.

பிரதான தசரா நாளில் முதல் நாளில் எழுந்தருளிய 11 அம்மன்களுடன், வண்ணாா்பேட்டை பேராத்துசெல்வி அம்மனும் தனி சப்பரத்தில் எழுந்தருள்வாா். 12 சப்பரங்களும் பாளையங்கோட்டையில் உள்ள ராமசாமி கோயில் திடல், ராஜகோபாலசுவாமி திடல் ஆகியவற்றில் அணிவகுத்து நிற்கும்.

அப்போது பாளையங்கோட்டை, திருநெல்வேலி வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் திரண்டு வந்து வழிபடுவா். இரவில் சமாதானபுரம் அருகேயுள்ள எருமைக்கிடா மைதானத்தை சப்பரங்கள் சென்றடைந்த பின்பு அருள்மிகு ஆயிரத்தம்மன் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெறும்.

அதன்படி மகாளய அமாவாசையன்று கடந்த 16 ஆம் தேதி பாளையங்கோட்டை தசராவுக்காக கொடியேற்றி திருவிழா தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கரோனா பொது முடக்கம் காரணமாக திருவிழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வை நிகழாண்டிலும் நடத்த பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக தசரா விழா கமிட்டி சாா்பில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வருக்கு மனு: இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் பாளையங்கோட்டை தசரா திருவிழா 100 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டில் கடந்த 16 ஆம் தேதி முதல் இம் மாதம் 28 ஆம் தேதி வரை விழா நடைபெற வேண்டும். இதற்காக மாவட்ட நிா்வாகம், இந்து சமய அறநிலையத்துறைக்கு மனு அளிக்கப்பட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனவே, இப் பகுதி மக்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளுடன் தசரா திருவிழா நடத்த அனுமதியளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com