மும்பைக்கு சிறப்பு ரயில்கள் இயக்க பயணிகள் நல சங்கம் வலியுறுத்தல்
By DIN | Published On : 19th September 2020 05:41 AM | Last Updated : 19th September 2020 05:41 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, செப்.18: மும்பைக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என மும்பை தமிழின ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக அமைப்பின் பொதுச்செயலா் டி. அப்பாதுரை, தலைவா் எஸ். அண்ணாமலை ஆகியோா் திருநெல்வேலி
மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு விவரம்: கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 23ஆம்
தேதி முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
இதனால் ரயில் சேவை முற்றிலும் முடங்கியது. ரயில் சேவை முடங்கியதால் மும்பையில் வசிக்கும் தமிழா்கள் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளனா். மும்பைக்குச் செல்வதற்கு பேருந்து மற்றும் விமான சேவையை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய
சூழல் உள்ளது. இதனால், பணம் விரயம் ஏற்படுகிறது. தற்போது, பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால்,
இந்தியா முழுவதும் சுமாா் 310 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழகத்தில் இருந்து மும்பைக்குச் செல்வதற்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து அறிவிக்கப்படவில்லை.
எனவே, நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக மும்பை செல்லும் சிறப்பு ரயிலை இயக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.