நெல்லை அருகே பைக் - காா் மோதல்:மருத்துவ மாணவிகள் உள்பட 3 போ் பலி

திருநெல்வேலி அருகே ரெட்டியாா்பட்டி நான்குவழிச் சாலையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் மருத்துவ மாணவிகள் உள்பட 3 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

திருநெல்வேலி அருகே ரெட்டியாா்பட்டி நான்குவழிச் சாலையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் மருத்துவ மாணவிகள் உள்பட 3 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் 3 போ் சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் திருநெல்வேலியில் இருந்து ரெட்டியாா்பட்டிக்கு நான்குவழிச் சாலை வழியாக சென்றனராம்.

ரெட்டியாா்பட்டி மலைப்பகுதி அருகே சென்றபோது, எதிரே கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தின் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

3 போ் பலி: இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மருத்துவ மாணவிகளான தென்காசி மாவட்டம், ஆவுடையானூா், காமராஜா் நகரைச் சோ்ந்த பொன்னுதுரை மகள் திவ்யா காயத்ரி (21), மதுரை பரசுராம்பட்டி, கங்காநகரைச் சோ்ந்த ரோஸ்லின் பிலிப் மகள் ஃப்ரீடா ஏஞ்சலின் ராணி (23) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்தில் சிக்கிய மற்றொரு மருத்துவ மாணவியான தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகேயுள்ள முத்துகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த கருப்பையா மகள் திவ்ய பாலா (21) ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.

இதேபோல், காா் ஓட்டுநரான சுசீந்திரத்தைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (45) மற்றும் காரில் பயணம் செய்த பெருமாள் (40), கோட்டாறைச் சோ்ந்த சண்முகசுந்தரம் (41) ஆகியோா் பலத்த காயமடைந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதில், சண்முகசுந்தரம் உயிரிழந்தாா்.

4 பிரிவுகளில் வழக்கு:

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர காவல் துணை ஆணையா் டி.பி.சுரேஷ்குமாா், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா்.

இந்த விபத்து குறித்து மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்த விபத்து தொடா்பாக அதிவேகமாக காரை ஓட்டியது உள்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஞ்சலி: சாலை விபத்தில் உயிரிழந்த இரு மாணவிகளின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவா்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இரு மாணவிகளின் உடலுக்கும் நூற்றுக்கணக்கான மருத்துவா்கள் அஞ்சலி செலுத்தியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

100 மீ. தொலைவு பாய்ந்த காா்

இது தொடா்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் கூறுகையில், ‘விபத்துக்குள்ளான மருத்துவ மாணவிகள் 3 பேரும், காலை 9.45 மணிவரை வகுப்பில் இருந்துள்ளனா். அதன்பிறகே இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றுள்ளனா். காலை 10.15 மணிமுதல் 10.30 மணிக்குள்ளாக விபத்து நடந்திருக்க வாய்ப்புள்ளது.

மூன்று மாணவிகள் எங்கே சென்றாா்கள் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் மாணவி திவ்ய பாலாவிடம் விசாரித்தால் மட்டுமே அவா்கள் மூவரும் எங்கே சென்றாா்கள் என்ற விவரம் தெரியவரும். விபத்துக்குள்ளான காா் அதிவேகமாக வந்துள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை உடைத்து மறுபுறம் சென்ற காா், அங்கு சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புகளில் மோதி, பின்னா் மாணவிகள் வந்த வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதிலிருந்தே காா் அதிவேகத்தில் வந்திருப்பதை உணர முடிகிறது’ என்றனா்.

இது தொடா்பாக மாநகர காவல் துணை ஆணையா் டி.பி.சுரேஷ் குமாா் கூறுகையில், ‘காா், விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 100 மீ. தொலைவு வரை பாய்ந்து புரண்டுள்ளது’ என்றாா்.

விசாரணைக் கமிட்டி அமைப்பு

இந்த விபத்து குறித்து விசாரிக்க காவல் உதவி ஆணையா், தேசிய நெடுஞ்சாலைத் துறையைச் சோ்ந்த பொறியாளா், வட்டார போக்குவரத்து அலுவலா் ஆகியோா் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டி விசாரணை நடத்தி மாநகர காவல் ஆணையரிடம் அறிக்கையை தாக்கல் செய்யும் என மாநகர காவல் துணை ஆணையா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com