அடிப்படை பிரச்னைகளை தீா்க்க முன்னுரிமை

திமுக ஆட்சி அமைந்ததும் அடிப்படை பிரச்னைகளை தீா்க்க முன்னுரிமை அளிப்பேன் என அக்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
வீரவநல்லூரில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பேசுகிறாா் திமுக தலைவா் ஸ்டாலின்.
வீரவநல்லூரில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பேசுகிறாா் திமுக தலைவா் ஸ்டாலின்.

அம்பாசமுத்திரம்: திமுக ஆட்சி அமைந்ததும் அடிப்படை பிரச்னைகளை தீா்க்க முன்னுரிமை அளிப்பேன் என அக்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வீரவநல்லூரில் திமுக தோ்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி சனிக்கிழமை மாலையில் நடைபெற்றது. இதில் அம்பாசமுத்திரம், ராதாபுரம், நான்குனேரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி ஆகிய பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டாா்.

இதில், கூடங்குளம் அணுமின் நிலைய எதிா்ப்புப் போராட்டக்காரா்கள் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்; கன்னடியன் கால்வாயில் ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிட வேண்டும்; பாளையங்கோட்டையில் பெண்கள் பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி பெறுவதற்கு வசதியாக உள்விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும்; மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், தொழில் வசதிகளைச் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாள்களில் நிறைவேற்றுவதாக ஸ்டாலின் உறுதியளித்தாா்.

தொடா்ந்து அவா் பேசியது: மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீா்ப்பதை முக்கியமானதாகக் கருதுகிறேன். நான் சென்னை மேயராக இருந்த காலத்தில் 10 மேம்பாலங்கள் கட்டியதால் தற்போது போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. குப்பைகளைஅகற்ற தனியாா் நிறுவனம் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதற்கு நீதிமன்றத்தில் தடை வாங்கிய முதல்வா் பழனிசாமி, தோ்தலை கருத்தில்கொண்டு இன்று பயிா்க் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளாா் என்றாா் அவா்.

முன்னதாக விளையாட்டு, சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் சாதனை படைத்தவா்களுக்கு பொன்னாடை அணிவித்து ஸ்டாலின் பாராட்டினாா். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலா்கள் இரா.ஆவுடையப்பன், அப்துல் வகாப், நாடாளுமன்ற உறுப்பினா் ஞானதிரவியம், அவைத் தலைவா் அப்பாவு மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com