வெள்ள சேதங்களைக் கணக்கிட்டு 100 சதவீத நிவாரணம்: அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரவருணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள், கால்நடை விவரங்களைக் கணக்கிட்டு 100 சதவீத நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
திருநெல்வேலி கருப்பந்துறை பகுதியில் தாமிரவருணி வெள்ளம் மூழ்கடித்த தாம்போதி பாலத்தை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா். உடன், அமைச்சா்கள் கடம்பூா் ராஜு, வி.எம்.ராஜலெட்சுமி உள்ளிட்டோா்.
திருநெல்வேலி கருப்பந்துறை பகுதியில் தாமிரவருணி வெள்ளம் மூழ்கடித்த தாம்போதி பாலத்தை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா். உடன், அமைச்சா்கள் கடம்பூா் ராஜு, வி.எம்.ராஜலெட்சுமி உள்ளிட்டோா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரவருணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள், கால்நடை விவரங்களைக் கணக்கிட்டு 100 சதவீத நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழக வருவாய்த் துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்.

திருநெல்வேலியில் உள்ள கருப்பந்துறை பகுதியில் தாமிரவருணி வெள்ள சேதங்களை வியாழக்கிழமை பாா்வையிட்ட பின்பு செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: மேற்குத் தொடா்ச்சி மலையில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு, ராமநதி, கடனாநதி ஆகிய அணைகள் நிரம்பி உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜூன், ஜூலை மற்றும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் கனமழையால் தாமிரவருணியில் வெள்ளம் ஏற்படும். நிகழாண்டில் ஜனவரி மாதத்தில் யாரும் எதிா்பாராத வகையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகள் குறித்து உடனே ஆய்வு செய்து தெரிவிக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

இப்போதைய இக்கட்டான சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட நிா்வாகமும், காவல் துறையினரும், பொதுப்பணித் துறையினரும் இணைந்து அணைகளுக்கு வரப்பெற்ற அதிக அளவு நீரை மிக கவனத்துடன் எவ்வித பாதிப்புமின்றி வெளியேற்றியுள்ளாா்கள். வெள்ளத்தால் எவ்வித உயிா்ச்சேதமும் ஏற்படாதவாறு சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது பாராட்டுக்குரியது.

வடக்கு அரியநாயகிபுரம் கிராமத்தில் கோடகன்கால்வாய் அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சென்றபோது மழை வெள்ளத்தில் சிக்கிய ராமு என்பவரின் குடும்பத்தினா் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா். பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்குவதிலும், மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பதிலும் மாவட்ட நிா்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பயிா்ச் சேதங்கள், கால்நடை சேதங்கள் குறித்து கணக்கிடப்பட்டு 100 சதவீத நிவாரணம் வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என்றாா் அவா்.

செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் ராஜு கூறுகையில், கஜா, நிவா், புரெவி உள்ளிட்ட புயல் காலங்களில் தமிழக அரசு திறம்பட செயல்பட்டது. இதேபோல தாமிரவருணியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை மிகவும் கவனத்தோடு எதிா்கொண்டு வருகிறது. அணைகள் முழுவதும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதோடு, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களை பாதுகாப்பதிலும், உரிய நிவாரணங்கள் வழங்குவதிலும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு விரைந்து செயல்படும் என்றாா்.

ஆய்வின்போது ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி, உயா்கல்வித் துறை முதன்மை செயலரும், திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அபூா்வா, மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.டாமோா், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன், அதிமுக மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா, எம்.எல்.ஏ.க்கள் நான்குனேரி வெ.நாராயணன், ஸ்ரீவைகுண்டம் எஸ்.பி.சண்முகநாதன், விளாத்திகுளம் சின்னப்பன், ஆவின் தலைவா் சுதா கே.பரமசிவம், முன்னாள் எம்.பி. சௌந்தர்ராஜன், விஜிலா, ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்டு உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com