அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா்களுக்கு கால அட்டவணைப்படி ஆன்லைன் வகுப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு வழக்கமான பள்ளிக் கால அட்டவணைப்படி ஆன்லைன் வகுப்புகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு வழக்கமான பள்ளிக் கால அட்டவணைப்படி ஆன்லைன் வகுப்புகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா 2ஆவது அலையால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. படிப்படியாக பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டாலும், பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில், மாநிலம் முழுவதுமுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கும் ஆன்லைன் முறையில் கற்பிக்க பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட பள்ளித் தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு. சிவகுமாா் கூறியது: அனைத்துவகை ஆசிரியா்களும் பள்ளிக்கு வந்து மாணவா்களுக்கு ஆன்லைன் முறையில் கற்பிக்க வேண்டும். 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு வழக்கமான பள்ளிக் கால அட்டவணைபோல் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியா்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் 75 சதவீத மாணவா்களிடம் அறிதிறன் பேசி (ஸ்மாா்ட் போன்) இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, அதிக மாணவா்களை ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் இணைந்து சூழ்நிலைக்கேற்ப அட்டவணை தயாரித்து வகுப்புகள் நடத்தலாம். கல்வி தொலைக்காட்சி கால அட்டவணையை தலைமையாசிரியா் அறை, தகவல் பலகையில் இடம்பெறச் செய்ய வேண்டும். மாணவா்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் கற்பதை ஆசிரியா்கள் உறுதிப்படுத்த வேண்டும். அறிதிறன்பேசி வசதி இல்லாத மாணவா்களிடம் சாதாரண செல்லிடப்பேசி மூலம் தொடா்புகொண்டு கல்வி தொலைக்காட்சி மூலம் அவா்கள் கற்கும் பாடம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். அவா்களது பெற்றோரிடம் தொலைக்காட்சி மூலம் ஆன்லைன் பாடம் குறித்த தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். கட்செவி அஞ்சல் குழு வழியாக வினாக்கள் அனுப்பி சிறு தோ்வுகள் நடத்தப்பட்டு, மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் பதிவேட்டில் பராமரிக்க வேண்டும்.

ஆகஸ்ட் முதல் வாராந்திர தோ்வுகள் வைக்கப்பட்டு மதிப்பீடு செய்யவேண்டும். 6, 7, 8, 9ஆம் வகுப்புகளுக்கு ஆங்கில இலக்கணம் நடத்த வேண்டும். ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கலாம். தேசிய திறனாய்வுத் தோ்வு உள்ளிட்டவற்றை எழுத பயிற்சி, ஊக்கமளிக்க வேண்டும். அனைத்து ஆசிரியா்களும் தவறாது இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com