இன்னும் 3 நாள்களில் தீபாவளி: நெல்லையில் மக்கள் கூட்டத்தால் திணறிய கடைவீதிகள்

திருநெல்வேலி மாநகரத்தில் அனைத்து கடைவீதிகளிலும் மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலைமோதியது. கடைகளுக்கு குழந்தைகளுடன் வந்து பட்டாசு, புத்தாடைகளை பொதுமக்கள் வாங்கிச் சென்றனா்.

தீபாவளி பண்டிகையையொட்டி, திருநெல்வேலி மாநகரத்தில் அனைத்து கடைவீதிகளிலும் மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலைமோதியது. கடைகளுக்கு குழந்தைகளுடன் வந்து பட்டாசு, புத்தாடைகளை பொதுமக்கள் வாங்கிச் சென்றனா்.

இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி நவம்பா் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆடைகள், பட்டாசுகள், இனிப்புகள் விற்பனை கடந்த 2 வாரங்களாக அதிகரித்துள்ளது. பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் திருநெல்வேலியில் நகரத்தில் உள்ள ரத வீதிகள், திருநெல்வேலி சந்திப்பு, வண்ணாா்பேட்டை, பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதிகளில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

காா்கள், இருசக்கர வாகனங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருவதால் திருநெல்வேலி மாநகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆடையகங்கள், இனிப்புக் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருள்களை வாங்கிச் சென்றனா். குழந்தைகளுக்கான பேன்சி ரக பட்டாசுகள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

கொல்கத்தா, குஜராத் பகுதிகளில் இருந்து குழந்தைகளுக்கான ஆடைகளும், திருப்பூரில் இருந்து பனியன் வகைகளும் திருநெல்வேலிக்கு விற்பனைக்காக அதிகளவில் வந்துள்ளன. இதுதவிர ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் இரட்டிப்பாகி உள்ளதால் ரூ.150-க்கு கூட ஆண்களுக்கான சட்டையை வாங்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கிறாா்கள்.

இதுகுறித்து, வியாபாரி சுவாமிநாதன் கூறியது: தீபாவளி பண்டிகையையொட்டி குஜராத், கொல்கத்தா, திருப்பூா் பகுதிகளில் இருந்து ஆயத்த ஆடைகள் வந்துள்ளன. ஆண்களுக்கான சாரம் ரூ.75 முதல் ரூ.150 வரையும், பெண்களுக்கான சேலைகள் மற்றும் நைட்டிகள் ரூ.100 முதல் ரூ.500 வரையும் சாலையோர கடைகளில் அதிகம் விற்பனையாகின. இதுதவிர குழந்தைகளைக் கவரும் வகையில் தீபாவளி துப்பாக்கிகள் மும்பையில் இருந்து கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்தன.

இவை ரூ.50 முதல் ரூ. 400 வரை விற்பனையாகின. நிஜமான ரிவால்வரில் குண்டுகளை லோடு செய்வது போல பொட்டுவெடிகளை லோடு செய்யும் வகையிலான நவீன துப்பாக்கி மற்றும் அதற்கான பிரத்தியேக பொட்டுவெடி ரூ.250-க்கு விற்பனையானது. கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக விற்பனை முற்றிலும் பாதித்தது. நிகழாண்டில் வடகிழக்கு பருவமழையால் தீபாவளி விற்பனை திருநெல்வேலியில் பாதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

மானூரைச் சோ்ந்த செல்லம்மாள் கூறியது: மானூா் சுற்றுவட்டாரத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருநெல்வேலி நகரத்தில் வந்தே தீபாவளி ஆடைகளை வாங்கிச் செல்கிறோம். குழந்தைகளுக்கு சாலையோர கடைகளில் வாங்கினால் விலை குறைவாக இருக்கும் என்பதால் தேடிச் சென்று வாங்குகிறோம்.

இதுதவிர கம்மல் உள்ளிட்ட அணிகலன்கள், முருக்கு, அதிரசம் உள்ளிட்டவற்றையும் வாங்கிச் செல்ல ஏதுவாக உள்ளதால் திருநெல்வேலி நகரத்திற்கு வருகிறோம். ஆடை, அணிகலன்கள் சகாய விலைகளிலும் கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம் ஏழை-எளிய தொழிலாளா்கள் பயனடைகிறாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com