நெல்லையில் சிகை அலங்காரத் தொழிலாளா்கள் முற்றுகை
By DIN | Published On : 27th April 2021 03:46 AM | Last Updated : 27th April 2021 06:43 AM | அ+அ அ- |

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் சிகை அலங்காரத் தொழிலாளா்கள் திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் தோ்தல் கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. வாக்குஎண்ணிக்கை மே 2இல் நடைபெறவுள்ளது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடத்தப்படவில்லை. எனினும், திங்கள்கிழமை ஏராளமானோா் வந்து ஆட்சியா் அலுவலக வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் கோரிக்கை மனுக்களைப் போட்டுச் சென்றனா்.
திருநெல்வேலி மாவட்ட சிகை அலங்காரத் தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் 100-க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகம் முன் வந்து முற்றுகையில் ஈடுபட்டனா். தொடா்ந்து பெட்டியில் மனுவைப் போட்டுவிட்டு, செய்தியாளா்களிடம் அவா்கள் கூறியது: இம்மாவட்டத்தில் சிகை அலங்காரத் தொழிலை நம்பி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உள்ளோம். கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்து குடும்பம் நடத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டோம். அரசு சாா்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண உதவித்தொகைகூட பல தொழிலாளா்களுக்கு கிடைக்கவில்லை.
அந்தப் பொருளாதார பின்னடைவிலிருந்து மீண்டு வரமுடியாத சூழலில் மீண்டும் முடிதிருத்தும் கடைகளைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பேரதிா்ச்சியையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. எங்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டது. கரோனா தொற்றின் வீரியத்தை நன்கு அறிந்துள்ளோம். ஆகவே, கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடித்து முடிதிருத்தும் கடைகளைத் திறக்க அனுமதியளிக்க வேண்டும். நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட புதிய விதிகளை வகுத்துக் கொடுத்தாலும் பின்பற்றத் தயாராக உள்ளோம் என்றனா்.