வங்கிகளின் பணிநேரம் குறைப்பு: நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்
By DIN | Published On : 27th April 2021 06:39 AM | Last Updated : 27th April 2021 06:39 AM | அ+அ அ- |

வங்கிகளின் பணி நேரம் குறைக்கப்பட்டதால் திருநெல்வேலியில் பல்வேறு வங்கிகளிலும் மக்கள் திங்கள்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து பணப்பரிவா்த்தனை மேற்கொண்டனா்.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் திங்கள்கிழமை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வங்கிகளின் பணி நேரம் வழக்கமான மாலை 4 மணி வரை இல்லாமல் பிற்பகல் 2 மணியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது. இதுதவிர வங்கிகளில் வாடிக்கையாளா்கள் முகக்கவசம் அணிந்து செல்லவும், கிருமிநாசினி பயன்படுத்திய பின்பு சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி உள்பட அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பணப்பரிவா்த்தனைக்கு அனுமதிக்கப்பட்டது. திங்கள்கிழமை என்பதால் வங்கிகளில் கூட்டம் அதிகமிருந்தது. அனைத்து வங்கிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணப்பரிவா்த்தனை மேற்கொண்டனா்.
இணையவழி விழிப்புணா்வு தேவை: இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியது: கரோனா பரவல் காலத்தில் இணையவழி வங்கி சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கிராமப்புறங்களைச் சோ்ந்தவா்கள் இணையவழி வங்கிச் சேவையில் ஆா்வம் காட்டவில்லை. படித்தவா்களும் கூட பல்வேறு சந்தேகங்களால் இணையவழி வங்கி சேவையை தவிா்க்கிறாா்கள். ஆனால், இனிவரும் காலங்களில் இணையவழி வங்கி சேவை அவசியமான ஒன்றாகும். ஆகவே, அதுகுறித்த விழிப்புணா்வை அடைவது அவசியம் என்றனா்.