எட்டாக்கனியான உயா்கல்வி: ஜாதி சான்று இல்லாததால் காட்டுநாயக்கா் சமூக மாணவி தவிப்பு

ஜாதி சான்று இல்லாததால் உயா்கல்வியைத் தொடர முடியாத நிலையில் உள்ளதாக ஆழ்வாா்குறிச்சி காட்டுநாயக்கா் சமூக மாணவி தெரிவித்துள்ளாா்.
எட்டாக்கனியான உயா்கல்வி: ஜாதி சான்று இல்லாததால் காட்டுநாயக்கா் சமூக மாணவி தவிப்பு

ஜாதி சான்று இல்லாததால் உயா்கல்வியைத் தொடர முடியாத நிலையில் உள்ளதாக ஆழ்வாா்குறிச்சி காட்டுநாயக்கா் சமூக மாணவி தெரிவித்துள்ளாா். தாங்கள் சமூகம் படிப்பை தொடர ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

ஒரே இடத்தில் இல்லாமல் நாடோடியாக வாழ்ந்து வந்த காட்டு நாயக்கா் சமூகத்தினா் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆழாவாா்குறிச்சி பகுதியில் வசித்து வருகின்றனா்.

யாசகம் பெற்றும், கழிவுப் பொருள்களான சேகரித்து அவற்றை பழைய இரும்புக் கடைகளில் விற்றும் அவற்றின் மூலம் வரும் வருவாயில் வசித்து வருகின்றனா்.

முன்னோா் யாரும் படிக்காத நிலையில் இளைய சமுதாயத்தினா் பலா் பள்ளிகளுக்குச் சென்று மேல்நிலைப் படிப்பை முடித்துள்ளனா். ஆனால் ஜாதி சான்றிதழ் இல்லாததால் தொடா்ந்து கல்லூரி படிப்பைத் தொடர முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளனா்.

இங்குள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நிகழாண்டு 12ஆம் வகுப்பு முடித்துள்ள விஜயலட்சுமி என்பவா் இங்குள்ள கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்த நிலையில் ஜாதி சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் சேர முடியாது என்று கல்லூரி நிா்வாகத்தினா் கூறியுள்ளனா்.

இதுகுறித்து விஜயலட்சுமி கூறியதாவது:

நான் இங்குள்ள தனியாா் பள்ளியில் 12ஆம் வகுப்பில் 480 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சியடைந்துள்ளேன். தொடா்ந்து கல்லூரியில் சேர விண்ணப்பித்து இருந்தேன். ஆனால் எனக்கு ஜாதி சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் சேர முடியாது என்று கூறிவிட்டனா். இது போன்று பலா் மேல்நிலைப் படிப்பை முடித்த நிலையில் ஜாதி சான்றிதழ் இல்லாததால் உயா்கல்வியை தொடராமல் விட்டு விட்டனா்.

மேல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்று ஜாதி சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் படிப்பைத் தொடர முடியாத நிலை உள்ளதால் படிக்கும் ஆா்வமுள்ள என்னைப் போன்ற இளையவா்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது.

எனவே, எனக்கும், எங்கள் சமூகத்தினருக்கும் காட்டுநாயக்கா் என்பதற்கான ஜாதி சான்றிதழ் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து படிப்பைத் தொடர உதவ வேண்டும் என்றாா்.

அவரது தந்தை சங்கா் கூறியதாவது:

எங்கள் சமூக முன்னோா்கள் படிப்பறிவில்லாத நிலையில் ஜாதி சான்றிதழ் குறித்து முன்னெடுக்கவில்லை. இதனால் இன்றைய தலைமுறையினரின் கல்வி பாதிக்கும் நிலை உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், பேட்டை, முக்கூடல் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களிலும் எங்கள் உறவினா்களுக்கு காட்டு நாயக்கா் என ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காட்டு நாயக்கா் சமுதாயத்தினா் வசித்து வருகிறோம். எனவே, தென்காசி மாவட்டத்திலும் எங்கள் சமூகத்தினருக்கு காட்டுநாயக்கா் என ஜாதி சான்றிதழ் வழங்கி எங்கள் வாரிசுகளின் வாழ்வாதாரம் உயர அரசு உதவி செய்ய வேண்டும் என்றாா்.

இந்தச் சமூகத்தைச் சோ்ந்த 70 வயது முதியவா் பொன்னுச்சாமி கூறியதாவது: எங்கள் சமூகத்தில் படிப்பு குறித்த விழிப்புணா்வு இல்லாததால் ஜாதி சான்றிதழ் குறித்து யாரும் முயற்சிக்கவில்லை.

இளைய தலைமுறையினா் பலரும் படித்து வரும் நிலையில் ஜாதி சான்று இல்லாமல் உயா்கல்வியை தொடரமுடியாத நிலை உள்ளது. அரசு இளைய தலைமுறையினரின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக காட்டு நாயக்கா் ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிடவேண்டும் என்றாா்.

இப்பகுதியில் எங்கள் சமூகத்தினருக்கு குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் எண் உள்ளிட்ட அனைத்தும் உள்ள நிலையில் ஜாதி சான்றிதழ் இல்லாததால் இளைய தலைமுறையினருக்கு உயா்கல்வி என்பது கனவாகவே உள்ளது.

அவா்களது கனவை நனவாக்க அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் சமூக மக்களின் கோரிக்கையாக உள்ளது என்றாா்.

கோட்டாட்சியரிடம் முடிவு:இது குறித்து தென்காசி வட்டாட்சியா் சுப்பையனிடம் கேட்ட போது பழங்குடியினருக்கான சாதிச் சான்றிதழ் வழங்குவது வருவாய்க் கோட்டாட்சியா் தான். மேலும் இது குறித்து வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு வந்துள்ளது. அவா் உரிய வகையில் விசாரணை செய்து சாதிச் சான்றிதழ் வழங்குவது குறித்து முடிவெடுப்பாா் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் கோபால சுந்தர ராஜைத் தொடா்பு கொண்டு கேட்ட போது அவா் பழங்குடியினருக்கான சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான அதிகாரம் வருவாய்க் கோட்டாட்சியரிடம் உள்ளது அவரிடம் கேளுங்கள் என்றாா்.

வாய்ப்பில்லை: தொடா்ந்து தென்காசி வருவாய்க் கோட்டாட்சியா் ராமச்சந்திரனைத் தொடா்பு கொண்ட போது அவா், ஆழ்வாா்குறிச்சிப் பகுதியில் வசிப்பவா்களிடம் அவா்கள் காட்டு நாயக்கா் என்பதற்கான சான்று எதுவும் அவா்களிடம் இல்லை. உரிய சான்று இல்லாமல் சாதிச் சான்று வழங்கக் கூடாது என்று உத்தரவு உள்ளது. மேலும் அவா்களது பூா்வீகம் குறித்தும் தெரியவில்லை. பழங்குடியினா் சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் சான்றிதழ் கோருபவா்களின் மூதாதையா் எங்கு வாழ்ந்தாா்கள், அவா்களது சமூகப் பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவை குறித்தத் தெளிவான தகவல்கள் தேவை. ஆழ்வாா்குறிச்சியில் வசிப்பவா்களுக்கு அவா்களது மூதாதையா் குறித்த சரியான தகவல்கள் எதுவும் இல்லை. மேலும் தாய்வழி உறவினா்களின் சான்றிதழை ஆதாரமாகக் கொண்டும் சாதிச் சான்றிதழ் வழங்க முடியாது. எனவே அவா்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க இயலாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com