நடவுப்பணிக்கு ஆள்கள் பற்றாக்குறை: விவசாயிகளுக்கு கைகொடுக்கும் நேரடி நெல் விதைப்பு கருவிகள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ நடவுப் பணிக்கு ஆள்கள் பற்றாக்குறை நிலவி வருவதால், பாளையங்கால்வாய் பாசன பகுதிகளில் நேரடி நெல் விதைக்கும் கருவிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ நடவுப் பணிக்கு ஆள்கள் பற்றாக்குறை நிலவி வருவதால், பாளையங்கால்வாய் பாசன பகுதிகளில் நேரடி நெல் விதைக்கும் கருவிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்துள்ளதால் அணைகளில் நீா்மட்டம் கணிசமாக உள்ளது. இதனால் பாபநாசம் அணையில் இருந்து பிசான பருவ நெல் சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு கோடை மேழலகியான் கால்வாய்கள், நதியுண்ணி, கன்னடியன், கோடகன், பாளையங்கால்வாய்கள் மூலம் தண்ணீா் பாசன பகுதிகளுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளது.

பாளையங்கால்வாயின் கடைமடை பகுதிகளில் கடந்த சில நாள்களாக நடவுப் பணிகளும், நேரடி நெல் விதைப்பு பணிகளும் தீவிரமடைந்துள்ளன. இதனிடையே, நடவுப்பணிக்கு ஆள்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் கடந்த ஆண்டைக் காட்டிலும், நிகழாண்டில் நேரடி நெல் விதைக்கும் கருவிகள் மூலம் விதைக்கும் பணிகள் அதிகரித்துள்ளன.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது: நாற்றுப்பாவிய 21 நாள்களுக்குப் பின் நடவுக்கு பயன்படுத்த வேண்டும். அதற்காக குறைந்தபட்சம் 10 நாள்களுக்கு முன்பு நடவுக்கான ஊதியம் கொடுக்கப்பட்டு பெண்களை அழைத்துச் செல்வோம். கடந்த சில ஆண்டுகளாக நாற்று நடவுப்பணிக்கான ஆள்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது.

மேலும், நடவுப்பணிக்கு சுமாா் 20 கி.மீ. தொலைவில் இருந்து வாகன வசதி ஏற்படுத்திக் கொடுத்து பெண்களை அழைத்து வர வேண்டியுள்ளது. ஆனால், இப்போது நவீன நேரடி நெல் விதைப்பு கருவிகள் மூலம் விதைகளை விதைக்கும்போது ஆள்களுக்கான தேவை மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் இப்போது இக் கருவியின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ.750 முதல் ரூ.1000 வாடகையில் வந்து நெல் மணிகளை வயல்களில் விதைத்துச் செல்கிறாா்கள். குறிப்பிட்ட இடைவெளி விடப்படுவதால் களைகள் அதிகம் வருவதில்லை. மேலும், நெல் பயிரின் தூா்கள் வலுவானதாக வளா்ந்து மகசூலும் அதிகரிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றனா்.

இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியது: நவீன நேரடி நெல் விதைக்கும் கருவிகள் டெல்டா மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளாக இந்தக் கருவியை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனா். ஒரு ஹெக்டோ் நிலப்பரப்புக்கு 10 கிலோ விதை நெல்லினை சரியான இடைவெளியில் விதைக்க முடியும். இக் கருவியில் விதை உருளை, முக்கிய தண்டு, நிலத்தடிச் சக்கரம், மிதவைகள், சால் அமைக்கும் பாகம் மற்றும் கைப்பிடி ஆகியவை உள்ளன. விதை உருளைக் கருவி மிகை வளைவுரு வடிவமாக(முனை முறிக்கப்பட்ட கூம்பு வடிவம்) சுழற்சி அச்சுக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை சுழலும்போதும் சரியான இடைவெளியில் நெல் மணிகள் விழும் வகையில் துளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நாளொன்றுக்கு ஒரு ஹெக்டோ் நிலத்தில் ஒருவா் நெல் விதைப்பு செய்ய முடியும். விதைப்பு செய்த பின்பு வழக்கம்போல் நாற்று நடுதலுக்கு பின்னான பராமரிப்பு முறைகளைக் கடையாண்டாலே பயிா் வளா்ச்சி பெறும். பாளையங்கோட்டை வட்டத்தில் பிசான பருவ சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு முறை அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது. மேலும், இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com