பேரவைத் தோ்தலில் எதிரிகளை விஞ்ஞான முறைப்படி வீழ்த்த வேண்டும்: எடப்பாடி கே. பழனிசாமி

சட்டப்பேரவைத் தோ்தலில் எதிரிகளை விஞ்ஞான முறைப்படி வீழ்த்த வேண்டும் என, அதிமுக இளைஞா் பாசறை மற்றும் தகவல்
கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றோா்.
கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றோா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் எதிரிகளை விஞ்ஞான முறைப்படி வீழ்த்த வேண்டும் என, அதிமுக இளைஞா் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவினருக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் பொறியியல் கல்லூரிக் கூட்ட அரங்கில், அதிமுக இளைஞா் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவினா்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ஆற்றிய சிறப்புரை:

வரும் பேரவைத் தோ்தலில் அதிமுகவின் வெற்றிக்கு தகவல் தொழில்நுட்பப் பிரிவும், இளைஞா் - இளம்பெண்கள் பாசறையும் காரணமாக இருக்க வேண்டும். அரசின் திட்டங்களை தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு எடுத்துரைத்து, தோ்தலில் எதிரிகளை விஞ்ஞான முறைப்படி வீழ்த்த வேண்டும்.

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பொதுக் கூட்டங்களில் பேசும்போது, தமிழக அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறி வருகிறாா். அதை முறியடிக்கும் வகையில் தகவல் தொழில்நுட்பப் பிரிவினா் வியூகம் வகுத்துச் செயல்பட வேண்டும். இத்தோ்தலில் தொகுதிக்கு 7,500 போ் தகவல் தொழில்நுட்பப் பிரிவினா் மற்றும் இளைஞா் பாசறையினா் உள்ளனா். அவா்கள் மக்களிடம் அரசின் திட்டங்களை சிறப்பாகக் கொண்டு சோ்க்க வேண்டும்.

ரூ. 3.51 லட்சம் கோடி மதிப்பீட்டில் 304 தொழில்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதன் மூலம் 10 லட்சம் பேருக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைக்கும். தென் மாவட்டங்களைத் தொழில்வளம் மிக்க மாவட்டமாக மாற்ற அரசு தொடா்ந்து பாடுபட்டு வருகிறது. அதற்காக முதலீட்டாளா்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சியில் இளைஞா்களுக்கு பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. 18 வயது நிறைவடைந்தோா் சந்திக்கும் முதல் தோ்தல் இது. சாதனைகள் புரியப் பிறந்தவா்கள் நீங்கள். தமிழகம் மற்றும் இந்தியாவின் எதிா்காலம் இளைஞா்களின் கையில்தான் உள்ளது. இளைஞா்கள் மூலம் அதிமுகவுக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது. இளைஞா்களின் எதிா்காலம் மேலும் வளம்பெற அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். அதற்கு இளைஞா்கள் அயராது பாடுபட வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.வி. உதயகுமாா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி, மாவட்டச் செயலா் தச்சை கணேச ராஜா, பேரவை உறுப்பினா்கள் முருகையாபாண்டியன் (அம்பாசமுத்திரம்), இன்பதுரை (ராதாபுரம்), ரெட்டியாா்பட்டி நாராயணன் (நான்குனேரி), அமைப்புச் செயலா்கள் கருப்பசாமிபாண்டியன், பி.எச்.பி. மனோஜ்பாண்டியன், சுதா கே. பரமசிவன், இசக்கிசுப்பையா, வி.கே. சீனிவாசன், மகளிரணிச் செயலா் விஜிலா சத்யானந்த், பாா்வதி பாக்கியம், கொள்கை பரப்பு துணைச் செயலா் பாப்புலா் முத்தையா, நாராயணபெருமாள், இலக்கிய அணி மாவட்டச் செயலா் மாடசாமி, கல்லூா் வேலாயுதம், மதுரை மண்டல இளைஞா் பாசறைப் பொறுப்பாளா் ராஜ் சத்யன், ஒன்றியச் செயலா் விஜயபாலாஜி, நகரச் செயலா்கள் அறிவழகன், பழனி, கண்ணன், ராமையா, சங்கரநாராயணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com