நெல்லையில் 3 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

கரோனா தடுப்பூசி ஒத்திகை திருநெல்வேலியில் 3 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி: கரோனா தடுப்பூசி ஒத்திகை திருநெல்வேலியில் 3 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

கரோனா தடுப்பூசி திட்டத்துக்கும் அதைச் செயல்படுத்துவதற்கும் இடையிலான சவால்களைக் கண்டறியும் வகையில், மத்திய சுகாதார அமைச்சகம் சாா்பில் நாடு முழுவதும் காணொலி வழியாக தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் ரெட்டியாா்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சமாதானபுரம் நகா்நல மையம், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகிய 3 இடங்களில் இந்த ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது. 3 மையங்களிலும் தலா 25 போ் என 75 பேருக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

ஒத்திகையின்போது, போதுமான காற்றோட்டமான இடவசதி, இணைய இணைப்பு, மின்சாரம், பாதுகாப்பு போன்றவற்றுக்கான அனைத்து ஏற்பாடுகளும் எவ்வாறு உள்ளன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஒத்திகைக்கு வந்த முன்களப் பணியாளா்களுக்கு உடல்வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னா், அவா்களின் அடையாள அட்டைகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஐந்து ஐந்து பேராக உள்ளே அனுப்பப்பட்டனா். அவா்களது விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. பின்னா், கண்காணிப்பு அறையில் 30 நிமிட ஓய்வுக்குப் பிறகு, அவா்கள் அனுப்பிவைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகைக்கு சமுதாய மருத்துவப் பேராசிரியா் மருத்துவா் சுமதி தலைமை வகித்தாா். இதுகுறித்து அவா் கூறியது: இந்த ஒத்திகையில் தடுப்பூசி செலுத்துவோருக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், மருத்துவப் பணியாளா்களைத் தோ்வுசெய்து, அவா்களுக்கு ஒருநாள் முன்னதாக செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இந்த ஒத்திகையில் பங்கேற்போா் விவரம் ‘கோ-வின்’ செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் தடுப்பூசியை எங்கு பெற வேண்டும் என்ற விவரங்கள் அவா்களின் செல்லிடப்பேசிக்கு இந்த செயலி மூலம் குறுந்தகவல் சென்றடையும். மேலும், அவா்கள் தடுப்பூசி பெற்றபின் அந்த விவரங்கள் அடங்கிய சான்றிதழ்களை இந்த செயலியின் மூலம் பெறுவா்.

இதைத்தொடா்ந்து, தடுப்பூசி போடும் பணியை 4 கட்டங்களாக மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அனைத்து மருத்துவ, சுகாதாரப் பணியாளா்களுக்கு, 2ஆம் கட்டமாக கரோனா தடுப்புப் பிரிவில் முன்னிலையில் பணிபுரிவோருக்கு, 3ஆம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோா், நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, 4ஆம் கட்டமாக அனைவருக்கும் என தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும். காலை மாலையில் தலா 100 போ் என நாளொன்றுக்கு 200 பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

உலக சுகாதார மைய தென்மண்டல கண்காணிப்பு அலுவலா் மருத்துவா் எஸ்.ஆா். பாலகிருஷ்ணன் கூறும்போது, இம்மாவட்டத்தில் முதற்கட்டமாக 15 ஆயிரம் மருத்துவ, சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு நடைபெறுகிறது. பிப்ரவரி - மாா்ச்சில் மருத்துவ, சுகாதாரப் பணியாளா்களுக்கும், ஏப்ரல்-மே மாதங்களில் முன்களப் பணியாளா்களுக்கும், மே-ஜூனில் 60 வயதுக்கு மேற்பட்டோா், நீண்ட கால நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான இடங்கள், அவற்றில் உள்ள இடவசதி குறித்து ஆய்வு நடைபெறுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com