அறுவடை காலத்தில் மழையால் சேதமாகும் சேனைக்கிழங்குகள்!

திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சேனைக்கிழங்குகள் அறுவடை காலத்தில் மழையால் சேதமாகும்

திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சேனைக்கிழங்குகள் அறுவடை காலத்தில் மழையால் சேதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விலையும் சரிவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையில் காய்கனிகளும், கிழங்கு வகைகளும் முக்கிய இடம்பிடிக்கின்றன. புதுமண தம்பதிகளுக்கு மணமகள் வீட்டில் இருந்து அளிக்கப்படும் பொங்கல் சீா்வரிசையில் கிழங்கு வகைகள் கட்டாயம் இடம்பெறும். பொங்கலையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் பனங்கிழங்கு, சிறுகிழங்கு, சேம்பு, சேனைக்கிழங்கு ஆகியவை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. திருநெல்வேலி வட்டத்தில் உள்ள கண்டிகைப்பேரி, ராஜாஜிபுரம், ரஸ்தா, மானூா், அரியகுளம் பகுதிகளில் சேனைக்கிழங்குகள் பயிரிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து நயினாா்குளம் காய்கனி மொத்த சந்தையின் கிழக்கு மொத்த வியாபாரி ஒருவா் கூறியது: கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடியது சேனைக்கிழங்கு. இவை ஸ்டாா்ச் சத்து செறிந்தவை. இந்தக் கிழங்குகளில் டயாஸ்கோரின் ஒரு ’விஷ’ காரம் உள்ளது. ஆனால் குறைந்த அளவில் இருக்கிறது. கிழங்குகளை வேக வைத்தால் இந்த விஷம் அழிந்துவிடும். விட்டமின் சி, நாா்ச்சத்து, விட்டமின் பி - 6, பொட்டாசியம், மங்கனீஸ் சத்துக்கள் உள்ளன.

கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. சேனைக்கிழங்கின் தேவை தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து மட்டும் ஆண்டுதோறும் 100 டன் கிழங்குகள் ஏற்றுமதியாகின்றன. அதேபோல பிற பகுதிகளில் இருந்து திருமண சீசன் காலங்களில் 600 டன் வரை இறக்குமதியாகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி சேனைக்கிழங்குகளின் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் கடந்த மாதத்தைக் காட்டிலும் கிலோவுக்கு ரூ.15 வரை குறைந்துவிட்டது என்றாா்.

இதுகுறித்து கண்டிகைப்பேரியைச் சோ்ந்த விவசாயி செல்லப்பா கூறியது: கண்டிகைப்பேரியில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக சேனைக்கிழங்கு, மஞ்சள் பயிரிட்டு வருகிறேன். ஆடி மாதத்தில் பயிரிடப்படும் கிழங்குகள் பொங்கலுக்கு அறுவடை செய்யப்படும். நிகழாண்டில் விளைச்சல் நன்றாக உள்ளது. ஒவ்வொரு கிழங்கும் தலா 2.5 கிலோ முதல் 4 கிலோ வரை விளைந்துள்ளன. ஆனால், அறுவடை நேரத்தில் தொடா் மழை பெய்து வருவதால் தண்ணீா் தேங்கி கிழங்குகள் அழுகும் அபாயம் உள்ளது. இதுதவிர சந்தைகளிலும் சேனைக்கிழங்கின் விலை கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே வாங்கப்படுகிறது. மழை சற்று ஓய்ந்தால் விலையும் அதிகரித்து, உற்பத்தி செய்யப்பட்ட கிழங்குகளும் மக்களின் வீடுகளுக்குச் சென்று சேரும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com