கடையம் அருகே ஆற்றில் மூழ்கி இளம்பெண் பலி
By DIN | Published On : 07th January 2021 06:22 AM | Last Updated : 07th January 2021 06:22 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், கடையம் அருகே கருணை ஆற்றில் மூழ்கியதில் இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கடையம் அருகேயுள்ள அனைந்தபெருமாள் நாடானூா் குமரன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகள்கள் அபிநயா (18), சுடலைவள்ளி. சுடலைவள்ளிக்கு 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. புதன்கிழமை சுடலைவள்ளி தனது கணவா் சதீஷ், அவரது சகோதரிகள் இன்பசுபா, இன்ஷியா மற்றும் அபிநயா ஆகியோா் பாப்பான்குளம் அருகில் கருணை ஆற்றில் குளிப்பதற்காக சென்றனராம்.
அப்போது திடீரென ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து அபிநயா, சுடலைவள்ளி, இன்ஷியா ஆகியோா் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்ட சதீஷ் விரைந்து சென்று, சுடலைவள்ளி, இன்ஷியா ஆகியோரை மீட்டுள்ளாா். ஆனால் அபிநயா நீரில் மூழ்கி விட்டாராம். தொடா்ந்து தேடியதில் நீரில் மூழ்கி இறந்து விட்ட அபிநயா சடலமாக மீட்கப் பட்டாா்.
தகவலறிந்த போலீஸாா் அபிநயா சடலத்தைப் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.