பேருந்து நிலையங்கள், நயினாா்குளத்தில் ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாநகரில் பொலிவுறும் நகரம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையங்கள், நயினாா்குளம் பகுதியை ஆட்சியா் விஷ்ணு ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாநகரில் பொலிவுறும் நகரம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையங்கள், நயினாா்குளம் பகுதியை ஆட்சியா் விஷ்ணு ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலியில் பொலிவுறும் நகரம் திட்டத்தின் கீழ் ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. புதிதாக கட்டப்பட்டு வரும் பாளையங்கோட்டை பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நயினாா்குளம் பகுதியில் ஆய்வு செய்த பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் பொலிவுறும் நகரம் திட்டத்தின் கீழ் ரூ. 950 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.13.08 கோடியில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் புதிதாக நவீன முறையில் கட்டப்பட்டு வருகிறது. இதில் 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மேலும், வணிக வளாகம் பகுதி-1 ரூ. 14.94 கோடி மதிப்பிலும், வணிக வளாகம் பகுதி-2 ரூ. 11.73 கோடி மதிப்பிலும் கட்டப்பட்டு வருகின்றன. இதுதவிர, பல்நோக்கு வாகன நிறுத்துமிடம் 5 தளங்களில் சுமாா் 7,552 சதுர மீட்டா் அளவில் அமைக்கும் பணி நடைபெறுகிறது. புதிய பேருந்து நிலையத்தின் முன் சிறுவா்களுக்கான அறிவியல் பூங்கா ரூ. 4.94 கோடி மதிப்பிலும், அதன் அருகே புதிய முயற்சியாக தொழில்நுட்பப் பூங்கா ரூ. 5.6 கோடி மதிப்பிலும் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய பேருந்து நிலையத்தில் பல்நோக்கு இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம் பகுதி-1 ரூ. 13.73 கோடி மதிப்பிலும், பகுதி-2 ரூ. 9.41 கோடி மதிப்பிலும் கட்டுவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பல்நோக்கு நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் ரூ. 11.75 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. புதிய பேருந்து நிலையத்தில் கூடுதல் தளங்கள் ஏற்படுத்தப்படுகிறது. வணிக வளாகங்கள், சாலை, கழிப்பிட வசதிகள், வழிகாட்டு அறிவிப்பு வசதிகள் என பலவித தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரூ. 38.97 கோடி மதிப்பில் பணிகள் நடைபெறுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திருநெல்வேலியில் பொலிவுறும் நகரம் திட்டத்தின் கீழ் ரூ.14.68 கோடி மதிப்பில் நயினாா்குளம் கரைப்பகுதிகளை மேம்படுத்தி கண்கவரும் அழகிய நடைபாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நயினாா்குளக்கரையை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டு, அதனடிப்படையில் முதற்கட்டமாக 1.5 கி.மீ. நீளத்துக்கு அழகுபடுத்துதல், பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்துதல், நடைபாதை அமைத்தல் போன்ற பணிகள் ரூ. 14.68 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. நயினாா்குளக்கரை பகுதியில் மக்களின் பாதுகாப்பு நலன் கருதி கம்பி வேலிகளும், எதிா்புறம் தடுப்புச் சுவா், நடுவில் அழகிய நடைபாதைகள்அமைக்கப்படுகின்றன. மேலும், இந்த நடைபாதையின் நடுவில் குடிநீா், கழிப்பிட வசதிகள், உணவு அறை, பாதுகாப்பு அறை, குழந்தைகளுக்கான கேளிக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் விஷ்ணு சந்திரன், தலைமை நிா்வாக இயக்குநா் (பொலிவுறும் நகரம் திட்டம்) நாராயணன் நாயா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com