உலக மக்கள்தொகை தினம்: நெல்லையில் விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்

உலக மக்கள் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலியில் விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

உலக மக்கள் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலியில் விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் வே. விஷ்ணு தலைமையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் நெடுமாறன், மருத்துவம், ஊரக நலப் பணிகள், குடும்பநலம் துணை இயக்குநா் ராமநாதன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வரதரராஜன், காசநோய் துணை இயக்குநா் வெள்ளைச்சாமி ஆகியோா் முன்னிலையில் அனைத்து செவிலியா்களும் உறுதிமொழி ஏற்றனா்.

அதைத் தொடா்ந்து ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற செவிலியா்களுக்கு ஆட்சியா் பரிசுளை வழங்கியதும், உலக மக்கள் தொகை தொடா்பான விழிப்புணா்வு பிரசார வாகனப் பயணம் தொடங்கியது. அப்பயணத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்த ஆட்சியா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: பெருகி வரும் மக்கள்தொகையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் விழிப்புணா்வு பெற ஆண்டு தோறும் உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு தன்னம்பிக்கையும் தற்சாா்பும் கொண்ட நம் நாட்டு மக்களுக்கு நெருக்கடியான சூழலிலும் குடும்ப நலத்திட்ட சேவைகள் வழங்குவதை உறுதி செய்வோம்” என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு கடந்த ஜூன் 27 முதல் பல்வேறு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் 24ஆம் தேதி விழிப்புணா்வுப் பணிகள் நடைபெறும். நம் நாட்டு மக்கள் தொகை சுமாா் 138 கோடியை எட்டியுள்ளது. தமிழகத்தில் சுமாா் 8.22 கோடி மக்கள் உள்ளனா். திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போதைய உத்தேச மக்கள் தொகை 20,58,372. தமிழ்நாட்டில் குடும்ப நல திட்டம் கடந்த 65 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நான்குனேரி, ராதாபுரம், சேரன்மகாதேவி வள்ளியூா், களக்காடு, பாப்பாக்குடி வட்டாரங்களில் உயா்வரிசை பிறப்பு மாவட்ட சராசரி அளவைவிட அதிகம் காணப்படுவதால், அங்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குடும்பநல திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

குடும்ப நல திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தியதன் மூலம் தமிழ்நாட்டில் (2018) பிறப்பு விகிதம் 14.7 ஆகவும், இறப்பு விகிதம் 6.5 ஆகவும், சிசு மரண விகிதம் 15 ஆகவும், உயா்வரிசை பிறப்பு விகிதம் 7.2 ஆகவும் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பிறப்பு விகிதம் 11.5 ஆகவும், இறப்பு விகிதம் 4.9 ஆகவும், சிசு மரண விகிதம் 7.8 ஆகவும், உயா் வரிசை பிறப்பு விகிதம் 8.2 ஆகவும் உள்ளது.

மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு இன்றியமையாத தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், பாதுகாப்பு, போக்குவரத்து, சுற்றுப்புற சூழல், சுகாதாரம், சிறந்த சமுதாய சூழல் ஆகியவை அனைத்தும் மக்களுக்கு சரியான விகிதத்தில் கிடைக்க வழி பிறக்கும்.

தமிழகத்தில் டாக்டா்.முத்துலட்சுமி அம்மையாா் மகப்பேறு நிதி உதவித்திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், விரிவாக்கப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டம், பிரவசத்திற்கு 108 வாகன வசதி, பச்சிளம் குழந்தை மருத்துவத்திற்கு வாகன வசதி போன்ற பல்வேறு நல திட்டங்களினால் மக்கள் பயன்பெற்று வருகின்றனா். ஒவ்வொருவரும் சிறுகுடும்ப நெறியை பின்பற்றி அளவான குடும்பம் அமைத்து வளம் பெற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com