ரூ.5,000 ஊக்கத்தொகை கோரி பூஜாரிகள் பேரமைப்பினா் மனு
By DIN | Published On : 13th July 2021 08:49 AM | Last Updated : 13th July 2021 08:49 AM | அ+அ அ- |

மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கக் கோரி, பூஜாரிகள் பேரமைப்பினா், திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பூசாரிகள் பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஆறுமுகநம்பி, ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘பூசாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். வயோதிகம், வறுமையில் வாடும் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் பெறும் திட்டத்தை எளிமைப்படுத்தி, பயன் பெறும் பூசாரிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூசாரிகள் இறக்க நேரிட்டால் அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
அரசு கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களுக்கு 2 சி மின்சார கட்டண விகிதத்தை ரத்து செய்ய வேண்டும். வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் வருவாய் இல்லாத கோயில்கள் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும். சொந்த வீடு இல்லாத பூசாரிகளுக்கு அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனா்.
வீரவநல்லூா் மக்கள் பொதுநல இயக்கத்தினா் அளித்த மனு: ‘வீரவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பழைய கட்டடம் வகுப்புகள் நடைபெறாமல் காலியாக உள்ளது. புதிய கட்டடத்தில் 10 வகுப்பறைகளுக்கு கட்டடம் இல்லை. எனவே, மாணவிகளுக்கு தனியாக 10-ஆம் வகுப்பு வரை பிரித்து பழைய கட்டடத்தில் மகளிா் உயா் நிலைப் பள்ளி செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனா்.
நான்குனேரி வட்டம், சுருளை கிராமத்தைச் சோ்ந்த பெருந்தலைவா் காமராஜா் சிலை பராமரிப்புக் குழு நிா்வாகி ஆறுமுகநயினாா் அளித்த மனுவில், ‘சுருளை கிராமத்தில் காமராஜா் சிலை நிறுவப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. சிலை பழுதடைந்து, வலது கை உடைந்த நிலையில் உள்ளது. ஊா் பொதுமக்கள் சாா்பில் சிலையை பராமரிப்பு செய்து வைத்துள்ளோம். ஜூலை 15-ஆம் தேதி சிலை திறப்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.