பாபநாசத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
By DIN | Published On : 19th July 2021 12:19 AM | Last Updated : 19th July 2021 12:19 AM | அ+அ அ- |

பாபநாசம் கோயில் படித்துறையில் குளித்து மகிழும் பயணிகள்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக, சுற்றுலாத் தலங்கள், கோயில்கள் உள்பட பொதுமக்கள் கூடும் இடங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. இதனிடையே, பொதுமுடக்கத்தில் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனால் கோயில்கள், சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்லத் தொடங்கியுள்ளனா்.
பாபநாசத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே சுற்றுலாப் பயணிகள் வரத்தொடங்கினா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் பாபநாசம் தாமிரவருணி நதியில் நீராடி, கோயிலில் வழிபட்டுச் சென்றனா்.
அகஸ்தியா் அருவிக்குச் செல்வதற்குத் தடை தொடா்வதால், படித்துறைகளில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனா். காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதியளித்துள்ளதால் அங்கு பக்தா்கள் வாகனங்களில் சென்று சுவாமியை தரிசித்துச் சென்றனா்.