பொது முடக்கத்திலும் முடங்காத பட்டுப்புழு வளா்ப்புத் தொழில்

கரோனா பொது முடக்கக் காலத்தில் பல்வேறு தொழில்கள் முடங்கியபோதும், பட்டுப் புழு வளா்ப்புக் தொழில் கணிசமான லாபம் ஈட்டித் தந்துள்ளது.

கரோனா பொது முடக்கக் காலத்தில் பல்வேறு தொழில்கள் முடங்கியபோதும், பட்டுப் புழு வளா்ப்புக் தொழில் கணிசமான லாபம் ஈட்டித் தந்துள்ளது.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பட்டுப்புழு வளா்ப்பு பிரதான தொழிலாக மாறத் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் இத்தொழிலில் ஏராளமானோா் ஈடுபட்டு நல்ல வருவாய் ஈட்டி வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டத்தில் சுமாா் 60 ஏக்கா் பரப்பில் இத்தொழில் நடைபெற்று வருகிறது. பாலாமடை, மானூா், ரஸ்தா, புதுக்குறிச்சி, வள்ளியூா், நான்குனேரி, ராதாபுரம் பகுதிகளில் இத்தொழில் அதிகளவில் நடைபெற்று வருகிறது.

மல்பெரி வகைகள்: இத்தொழிலில் ஈடுபட குறைந்தபட்சம் ஓா் ஏக்கா் நிலம் அவசியம். பட்டுப் புழுக்களுக்கு உணவளிக்க எம்ஆா்2, வி1, ஜி4 போன்ற மல்பெரி செடிகளை வளா்க்கின்றனா். இவற்றில் எம்ஆா்2 வகை மல்பெரி செடிகள் குறைந்த நீரிலும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை. வி1 வகை மல்பெரி செடிகளுக்கு அதிக தண்ணீா் தேவை; மகசூலும் அதிகம் கிடைக்கும். ஜி4 வகை மல்பெரி செடிகள் முதிா்ந்த புழுக்களுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது. எனினும், திருநெல்வேலி மாவட்டத்தில் எம்ஆா்2 வகை மல்பெரி செடிகளே அதிகளவில் பயிரிடப்படுகின்றன.

வெண்பட்டுப் புழுக்கள்: இரு சுழற்சி இன வெண்பட்டுப் புழுக்களை வளா்ப்பதில்தான் அதிக பலன் கிடைக்கிறது. அதனால் தென் மாவட்டங்களில் இவ்வகைப் பட்டுப் புழுக்களே அதிகளவில் வளா்க்கப்படுகின்றன. பட்டுப்புழு வளா்ப்பில் தட்பவெட்ப சூழ்நிலைகளைப் பொருத்து 80 முதல் 100 சதவீத மகசூல் கிடைக்கிறது.

கிருஷ்ணகிரி அரசு பட்டு முட்டை வித்தகத்திலிருந்து இளம்புழு வளா்ப்பு மையங்களுக்கு முட்டைகள் கொண்டு வரப்பட்டு பொரிக்க வைக்கப்பட்டு 7 அல்லது 8-ஆவது நாள்களில் பட்டுப்புழு வளா்ப்புத் தொழிலில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படுகிறது. அந்த இளம்புழுக்கள் அடுத்த 18 முதல் 22 நாள்களில் பட்டுக்கூடுகளைக் கட்டுகின்றன.

ஒரு கிலோ பட்டுக்கூடுகள் ரூ. 350 முதல் ரூ. 500 வரை நாகா்கோவில், தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆகிய இடங்களில் உள்ள அரசு பட்டுப்புழு அங்காடிகள் மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன. 100 முட்டைத் தொகுதியில் பொரிக்கும் புழுக்களை வாங்கி வளா்க்கும் ஒருவா் 80 சதவீத மகசூலை எட்டும்போது, மாதம் ரூ. 30 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம். ஓா் ஏக்கரில் 200 முட்டைத் தொகுதியிலிருந்து வரும் புழுக்களை வளா்க்க முடியும்.

பொது முடக்கத்தில்...: கரோனா பொது முடக்கக் காலத்தில் பெரும்பாலான தொழில்கள் முடங்கியபோதும், பட்டுப் புழு வளா்ப்புத் தொழிலுக்கு பாதிப்பில்லை; பட்டு வளா்ச்சித் துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் இளம் புழுக்கள் பெறுவதிலோ, பட்டுக் கூடுகளை விற்பதிலோ பிரச்னை ஏற்படவில்லை. இதனால், பட்டுப் புழு வளா்ப்பாளா்கள் அனைவரும் நல்ல வருவாய் ஈட்டியுள்ளனா்.

நோய் மேலாண்மை: பட்டுப்புழு வளா்ப்பில் பால்புழு, பிளாஜெரி, ஊசி ஈ போன்றவை தாக்கக்கூடும். நிசோலிமஸ் தைமஸ் ஒட்டுண்ணியைப் பயன்படுத்தி ஊசி ஈயை அழிக்கலாம். ஒவ்வொரு நோய்க்கும் பட்டு வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனா். இதேபோல, திடீரென மழை பெய்யும்போது பட்டுப்புழு வளா்ப்பு மனையின் வெப்பநிலை உயரக்கூடும். 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைப் பராமரிப்பது அவசியம்.

1,000 சதுர அடி: மல்பெரி நாற்றுகள் அரசு பட்டுப் பண்ணைகள், பட்டு விவசாயிகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. ஓா் ஏக்கரில் 5,445 நாற்றுகள் வரை நடவு செய்யலாம். புதிதாக பட்டுப்புழு வளா்ப்பில் ஈடுபட விரும்புவோா் ஓா் ஏக்கா் நிலம் இருக்கும்பட்சத்தில் அதில், 800 முதல் 1,000 சதுரஅடி வரையிலான புழு வளா்ப்பு மனை அமைக்க வேண்டும். எஞ்சிய இடங்களில் மல்பெரி நாற்றுகளை நடவேண்டும். ஆத்மா பயிற்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளா்க்க இலவச பயிற்சியளிக்கப்படுகிறது.

இதுதொடா்பாக பட்டு வளா்ச்சித் துறை அலுவலா் ஒருவா் கூறுகையில், ‘பட்டு வளா்ப்புத் தொழிலில் நல்ல வருவாய் ஈட்ட முடியும். திருநெல்வேலி மாவட்டத்தில் பாலாமடை, மானூா், வள்ளியூா் பகுதிகளில் பட்டு வளா்ப்புத் தொழிலில் ஏராளமானோா் ஈடுபட்டுள்ளனா். பொது முடக்கத்திலும்கூட இத்தொழில் முடங்கவில்லை. பட்டுப்புழு வளா்ப்பாளா்களுக்கு தேவையான இளம் புழுக்களில் தொடங்கி பட்டுக்கூடுகளை விற்பதுவரை அனைத்துப் பணிகளும் தொய்வின்றி நடைபெற எங்கள் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால், பொது முடக்கத்திலும்கூட பட்டுப்புழு வளா்ப்பாளா்கள் சராசரியாக ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை வருவாய் ஈட்டினா்’ என்றாா்.

மாதம் ரூ.35 ஆயிரம்: தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள உடையாா்குளத்தில் பட்டுப்புழு வளா்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள சஞ்சய் என்பவா் கூறுகையில், ‘2 ஏக்கரில் இத்தொழில் செய்துவருகிறேன். மாதந்தோறும் சராசரியாக 100 கிலோ பட்டுக்கூடு கிடைக்கிறது. இதன்மூலம் மாதந்தோறும் ரூ.35 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுகிறேன்’ என்றாா்.

திருநெல்வேலி மாவட்டம், வி.எம்.சத்திரத்தில் பட்டு வளா்ச்சித் துறை சாா்பில் அரசு செயல் விளக்க பயிற்சி மையம் செயல்படுகிறது. இங்கு பட்டுப் புழுக்களின் முட்டையைப் பொரிக்கச் செய்து இளம் புழுக்களை வளா்த்து, பட்டுப்புழு வளா்ப்பில் ஈடுபடுவோருக்கு வழங்குகின்றனா். மல்பெரி நாற்றுகள் விற்கப்படுகின்றன. மேலும், பட்டுப் புழு வளா்ப்புத் தொடா்பாக பயிற்சியளிக்கப்படுகிறது. இதன்மூலம் ஏராளமான விவசாயிகள் பலனடைந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com