‘பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியா்கள் மீது கடும் நடவடிக்கை தேவை’

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைப்பு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: சில தினங்களாக பள்ளி ஆசிரியா்கள் சிலா் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வருவது பேரதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறிழைத்தோா் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

சமுதாயம் காலங்காலமாகப் போற்றி வணங்கும் உயா்ந்த தொழிலைச் செய்துகொண்டிருப்போா் ஆசிரியா்கள். ஆனால், ஒருசிலரின் இழிசெயலால் ஆசிரியா் சமுதாயமே மனவேதனைக்கு உள்ளாக வேண்டியுள்ளது.

ஆசிரியா் - மாணவா் உறவு என்பது பெற்றோா் - குழந்தைகள் உறவைப்போன்றது. அதற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டோா் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் அரசு நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

அதேபோல, ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியா்கள், மாணவா்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை விரைவில் வெளியிடவுள்ளதாக அமைச்சா் அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது. இனிமேலும் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் பள்ளிகளில் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு கீழ்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் பாலியல் புகாா்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட வேண்டும். அதில், பெற்றோா் - ஆசிரியா் கழகப் பிரதிநிதிகள், குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளா்கள், மாணவா் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும். பள்ளிகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ‘விசாகா கமிட்டி’ பெரும்பாலான பள்ளிகளில் செயல்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. அனைத்துப் பள்ளிகளிலும் விசாகா கமிட்டி அமைத்து அதைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.

பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாநில அளவில் உயா்நிலைக் குழுவை அமைத்து, அதன் பரிந்துரைகளைப் பெற்று அவற்றை அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள ஆசிரியா்கள் மீதான வழக்கை விரைந்து முடித்து, உரிய தண்டனை வழங்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com