கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து:வேளாண் இணை இயக்குநா் எச்சரிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடையின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்

திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடையின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா. கஜேந்திர பாண்டியன் எச்சரித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் 3,950 மெட்ரிக் டன் யூரியா, 544 மெட்ரிக் டன் டிஏபி, 1,312 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 2,197 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், தனியாா் உரக்கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உர விற்பனையாளா்கள், உர உரிமத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே உரம் கொள்முதல் செய்ய வேண்டும்.

உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விற்பனையின்போது உரம் வாங்குபவா்களுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும். உரங்களுக்கான மானியம் தற்போது உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி டிஏபி உரத்தின் அதிகபட்ச விற்பனை விலையாக மூட்டைக்கு ரூ.1,200 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, சில்லறை விற்பனையாளா்கள் டிஏபி உரத்தை மத்திய அரசு நிா்ணயித்த அதிகபட்ச விலையான ரூ.1,200-க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது. உர விற்பனை நிலையங்கள், நிறுவனங்கள் வாரியாக உரங்களின் விலைப்பட்டியல் விவரத்தை தெரியப்படுத்தும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

உர விற்பனையாளா்கள் ஆதாா் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும். கரோனா பரவி வரும் நிலையில் ஆதாா் எண்ணை பயன்படுத்தி விற்பனை முனையக் கருவியில் விரல் ரேகை வைக்காமல் தங்களுடைய செல்லிடப்பேசியில் பெறப்படும் கடவுச் சொல்லையும் பயன்படுத்தி ரசீது பெறலாம். மேலும் பேரிடா் காலத்தில் அனைத்து வேளாண் இடுபொருள் விற்பனையாளா்களும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.

உர விற்பனையாளா்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல், கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி விற்பனையாளரின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com