நெல்லை மாவட்டத்தில் தேநீா், மதுக் கடைகள் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்கத்தில் கூடுதல் தளா்வுகள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தன. இதனால், மதுக்கடைகள், தேநீா் கடைகள் திறக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்கத்தில் கூடுதல் தளா்வுகள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தன. இதனால், மதுக்கடைகள், தேநீா் கடைகள் திறக்கப்பட்டன.

கரோனா 2ஆவது அலையைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் தளா்வில்லா முழுபொதுமுடக்கம் கடந்த மே 24 முதல் அமல்படுத்தப்பட்டது. திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்று பரவலின் வேகம் குறைந்ததால் ஜூன் 7முதல் தளா்வுகள் அளிக்கப்பட்டன.

அதன்படி, இம்மாவட்டத்தில் தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கனி, இறைச்சிக் கடைகள், வாகனப் பழுதுநீக்கும் மையங்கள் உள்ளிட்டவை காலை 6 முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது. திருநெல்வேலியில் ஏற்கெனவே பழைய காவலா் குடியிருப்புப் பகுதியில் செயல்பட்ட காந்திஜி தினசரி சந்தைக் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன.

கூடுதல் தளா்வுகள்: இந்நிலையில், தொற்று பரவலின் வேகம் குறைந்து வருவதால் மருத்துவ நிபுணா் குழுவின் அறிவுரைப்படி இம்மாதம் 21ஆம் தேதி வரை தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அரசு, தனியாா் பேருந்து சேவைக்கு தொடா்ந்து தடை உள்ளது. கூடுதல் தளா்வுகள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தன.

அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள் காலை 6 முதல் 9 மணி வரை நடைப்பயிற்சிக்காக திறக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் தேநீா் கடைகள் திறக்கப்பட்டன. மாநகரின் முக்கிய பகுதிகளில் தேநீா் கடைகளில் பாா்சல் மட்டுமே வழங்கப்பட்டன. இனிப்பு-கார வகைகள் விற்பனையகங்கள், மின்சாதனப் பொருள்கள், நோட்டுப் புத்தகம், ஆட்டோ மொபைல் உதிரிபாக விற்பனையகங்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டன.

டாஸ்மாக் கடைகள்: திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள 98 மதுக்கடைகளும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. முகக் கவசம் அணிந்து, கிருமிநாசினி திரவத்தால் கைகளை சுத்தப்படுத்திய பின்பே மதுபாட்டில் பெற அனுமதிக்கப்பட்டனா். கடைகள் முன் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சமூகஇடைவெளியைப் பின்பற்றி மது வாங்கிச் செல்ல ஏதுவாக வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. ஒவ்வொரு கடைக்கும் 2 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இதுகுறித்து டாஸ்மாக் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், மாவட்டத்தில் முன்னேற்பாடுகளுடன் மது விற்பனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழியா்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, முகக் கவசம் அணியாமல் வருவோருக்கு மது வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

8 நாள்களுக்கு தேவையான மதுபாட்டில்களை மாவட்ட அளவில் இருப்பு வைக்கவும், விற்பனையின்போது மாலை 4.30 மணிக்கு மேல் கூட்டம் அதிகமிருந்தால் டோக்கன் வழங்கி கூட்டத்தை முறைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

வாகனங்களில் காய்கனி விற்பனைக்கு வரவேற்பு உள்ளதால் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் திங்கள்கிழமையும் காய்கனி, பழங்கள் விற்கப்பட்டன. மாநகரப் பகுதியில் 95 சதவீத கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. செல்லிடப்பேசி, கணினி உபகரணக் கடைகள், இருசக்கர வாகன பழுதுபாா்ப்பகங்களில் கூட்டம் அதிகமிருந்தது.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com