ரஸ்தாவில் திமுக கூட்டணியினா் மறியல்
By DIN | Published On : 26th March 2021 08:23 AM | Last Updated : 26th March 2021 08:23 AM | அ+அ அ- |

திருநெல்வேலி அருகேயுள்ள ரஸ்தா பகுதியில் திமுக கூட்டணி கட்சியினா் வியாழக்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், தனது கூட்டணி கட்சியினருடன் மேலதாழையூத்து, நாஞ்சான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வாக்குசேகரித்தாா்.
பின்னா், அவா்கள் ரஸ்தா பகுதிக்கு சென்றபோது மானூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் உரிய அனுமதியின்றி செல்லக்கூடாது என தடுத்தாராம். அப்போது தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தகவல் தெரிவித்துவிட்டே வாக்குசேகரிக்க செல்வதாக கட்சியினா் கூறினா். அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், திமுக வேட்பாளரும், கூட்டணி கட்சியினரும் சங்கரன்கோவில்-திருநெல்வேலி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். திமுக மாவட்ட துணைச் செயலா் ஆ.க.மணி, மானூா் வடக்கு ஒன்றியச் செயலா் அன்பழகன், மாநகர துணைச் செயலா் ரமேஷ், காசிமணி உள்ளிட்டோா் மறியலில் பங்கேற்றனா். இத்தகவலறிந்த மானூா் காவல் ஆய்வாளா் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.