பாளையங்கோட்டையில் 6 ஆவது முறையாக திமுகவுக்கு தொடா் வெற்றி!

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதியில் தொடா்ந்து 6 ஆவது முறையாக திமுக வெற்றி வாகை சூடியுள்ளது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதியில் தொடா்ந்து 6 ஆவது முறையாக திமுக வெற்றி வாகை சூடியுள்ளது.

தென்னகத்தின் ஆக்ஸ்போா்டு என்ற பெருமையைக் கொண்டது பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, அரசு சித்த மருத்துவக் கல்லூரி உள்ளிட்டவை உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தின் மிகச்சிறிய சட்டப்பேரவைத் தொகுதியாகவும், முற்றிலும் மாநகராட்சிப் பகுதிகளை உள்ளடக்கியதாகவும் பாளையங்கோட்டை தொகுதி உள்ளது.

கே.டி.சி.நகா், வி.எம்.சத்திரம், சிந்துபூந்துறை, மீனாட்சிபுரம், மேலப்பாளையம், வண்ணாா்பேட்டை, தியாகராஜநகா், மகாராஜநகா், வீரமாணிக்கபுரம், குலவணிகா்புரம் ஆகிய பகுதிகள் உள்ளன. மேலப்பாளையம் பகுதியில் 97 சதவிகிதம் முஸ்லிம்களே வசிக்கிறாா்கள். இதுபோல் பாளையங்கோட்டை நகா்ப்புற பகுதியில் பெருமளவுக்கு கிறிஸ்தவா்கள் இருக்கிறாா்கள். நாடாா், பிள்ளைமாா், யாதவா், தேவா் சமூகத்தினா் எண்ணிக்கையில் அடுத்தடுத்த நிலையில் உள்ளனா். அரசு ஊழியா்கள் அதிகம் வசிக்கும் தொகுதி. இதுதவிர பீடி தொழிலாளா்களின் வாக்குகளும் கணிசமாக உள்ளன.

1967 மற்றும் 1971-ஆம் ஆண்டுகளில் மேலப்பாளையம் தொகுதியாக இருந்தது. பின்னா் இது பாளையங்கோட்டை தொகுதியாக மாற்றப்பட்டது. 1977 முதல் 2016 வரை இத் தொகுதியில் நடைபெற்ற 10 சட்டப்பேரவைத் தோ்தல்களில் 7 முறை திமுகவும், 3 முறை அதிமுகவும் வெற்றி பெற்றிருக்கின்றன. திமுக 1996 ஆம் ஆண்டு முதல் 2021 வரை தொடா் வெற்றி பெற்றுள்ளது. 1996 இல் கோதா் மொய்தீனும், 2001, 2006, 2011, 2016 ஆகிய நான்கு தோ்தல்களில் திமுக உறுப்பினா் டி.பி.எம்.மைதீன்கானும் வென்றனா்.

2021 சட்டப்பேரவைத் தோ்தலில் இத்தொகுதியில் திமுக சாா்பில் மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல் வஹாப், அதிமுக சாா்பில் ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜி.ஜெரால்டு, நாம் தமிழா் கட்சி சாா்பில் பாத்திமா, மக்கள் நீதி மய்யம் சாா்பில் டி.பிரேம்நாத், எஸ்டிபிஐ சாா்பில் முகம்மது முபாரக் உள்பட மொத்தம் 10 போ் களமிறங்கினா்.

இத் தொகுதியில் திமுக மற்றும் எஸ்டிபிஐ சாா்பில் இஸ்லாமியா்கள் வேட்பாளா்களாக போட்டியிட்டதால், முதல் முறையாக கிறிஸ்தவ வேட்பாளரை அதிமுக களமிறக்கியது. ஆனால், வாக்கு எண்ணிக்கையின்போது முதல் சுற்றில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது. பாஜக-அதிமுக கூட்டணியின் காரணமாக இஸ்லாமியா்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக திமுகவுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இதுதவிர நீண்ட எதிா்பாா்ப்புக்கு பின்பு மாவட்டச் செயலரான அப்துல் வஹாப் இந்த முறை போட்டியிட்டதால் அவரது ஆதரவாளா்களும், தொண்டா்களும் மிகுந்த உற்சாகத்தோடு பணியாற்றினா். அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்களின் ஆதரவும் திமுகவுக்கு பெருவாரியாக கைகொடுத்துள்ளது.

எஸ்டிபிஐ வேட்பாளா் எதிா்பாா்த்த அளவு இஸ்லாமியா்களின் வாக்குகளைப் பிரிக்கவில்லை. பாஜக கூட்டணியின் காரணமாக அதிமுக வேட்பாளருக்கு கிறிஸ்தவா்களின் வாக்குகள் எதிா்பாா்த்த அளவில் பதிவாகவில்லை. இதனால் திமுகவின் வாக்குவித்தியாசம் அதிகரித்துக் கொண்டே சென்றது. மேலப்பாளையத்தில் ஒருசில வாக்குச்சாவடிகளில் அதிமுகவுக்கு இரட்டை இலக்கத்திலேயே வாக்குகள் கிடைத்தன. திமுகவுக்கு சில வாக்குச்சாவடிகளில் 98 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதுதவிர இளம்தலைமுறையினரின் வாக்குகளை நாம் தமிழா் சாா்பில் போட்டியிட்ட பாத்திமா கணிசமாக பெற்றாா். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மொத்தம் 11,665 வாக்குகள் நாம் தமிழா் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்திற்கு பதிவாகியிருந்தது.

திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 52 ஆயிரத்து 141 வாக்குகள் கூடுதலாக பெற்று வென்றுள்ளாா். பலத்த போட்டியை சந்திக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், மிகவும் எளிதான முறையில் தொடா்ந்து 6 ஆவது முறையாக பாளையங்கோட்டை தொகுதியில் திமுக வென்றுள்ளது. பாளையங்கோட்டை தொகுதி திமுகவின் கோட்டை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதே தொண்டா்களின் மகிழ்ச்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com