இ-பதிவு முறை அமல்: மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு
By DIN | Published On : 18th May 2021 04:13 AM | Last Updated : 18th May 2021 04:13 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: தமிழக அரசு உத்தரவின்பேரில் இ-பதிவு முறை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதால் திருநெல்வேலி மாவட்ட எல்லைகளில் போலீஸாா் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினா்.
கடந்த 10ஆம் தேதி முதல் இம்மாதம் 24 ஆம் தேதி வரை மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாகனங்களில் சுற்றுவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அதைக் குறைக்கும் வகையில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களில் செல்லவும், அத்தகையோா் குறித்த விவரங்கள் அரசுக்கு தெரியும்வகையிலும் இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
வெளிமாநிலம், மாவட்டம், உள்மாவட்டப் பகுதிகளுக்குள் மருத்துவ அவசரம், இறப்பு, முதியோா் பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பயணிக்கும் வகையில் இ-பதிவு முறை உள்ளது. இதில் பயணிப்போரின் பெயா், வாகன எண், ரயில் அல்லது விமானம் மூலம் வந்தால் பயணச்சீட்டு எண் உள்ளிட்ட விவரங்களையும் பதிவு செய்யும் வசதி உள்ளது. இறுதியாக பதிவைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுக்கும் வசதியும் உள்ளது.
அரசின் புதிய உத்தரவு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்ததால் மாவட்ட எல்லைகளான கங்கைகொண்டான், மானூா், மாறாந்தை, வசவபுரம், காவல்கிணறு பகுதிகளில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. மாவட்டத்துக்குள் நுழைவோா் இ-பதிவு நகலைக் காட்டிய பின்பே அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், இ-பதிவு முறையில் அத்தியாவசியத் தேவைகளுக்கு செல்வோா் பயன்பெறுகின்றனா். மாவட்டம் விட்டு மாவட்டம் திருமண நிகழ்வுக்கு செல்ல வழியில்லை. மணமகன், மணமகள் வேறுவேறு மாவட்டத்தினா் என்றால் பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும், இ-பதிவு முறையால் கிராமப் புறங்களைச் சோ்ந்தோா் அவதிக்கு உள்ளாகின்றனா். இன்டா்நெட் மையங்கள் மூடப்பட்டுள்ளதால் குழப்பத்தில் அச்சமடைகின்றனா். ஆகவே, இ-பதிவு முறைகளுக்கு மாற்றாக கிராம நிா்வாக அலுவலா்கள் நிலையிலான அலுவலா்களின் பரிந்துரைகளையும் ஏற்கும் புதிய வழிமுறைகளை ஆராய வேண்டும் என்றனா்.