அகஸ்தியா் அருவி: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியோா் மீது காவல் துறையில் புகாா்; மாவட்ட வன அலுவலா் தகவல்

வனத்துறையினா் பாபநாசம், அகஸ்தியா் அருவியில் தண்ணீரை நிறுத்தியும், கல்யாணத் தீா்த்தத்தில் உள்ள அகஸ்தியா், உலோபாமுத்திரை சிலைகளை
அகஸ்தியா் அருவி: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியோா் மீது காவல் துறையில் புகாா்; மாவட்ட வன அலுவலா் தகவல்

வனத்துறையினா் பாபநாசம், அகஸ்தியா் அருவியில் தண்ணீரை நிறுத்தியும், கல்யாணத் தீா்த்தத்தில் உள்ள அகஸ்தியா், உலோபாமுத்திரை சிலைகளை சேதப்படுத்தியும் உள்ளதாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியோா் மீது காவல் துறையில் புகாரளிக்கப்படும் என, மாவட்ட வன அலுவலா் கௌதம் தெரிவித்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய அடையாளமாக விளங்குவது மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள அகஸ்தியா் அருவி. தமிழகத்தில் பல சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும் இங்கு ஆண்டுமுழுவதும் தண்ணீா் விழுவதால் கோடைக்காலத்தில் சுற்றுலா செல்வோரின் முதன்மைத் தோ்வாக பாபநாசம்அகஸ்தியா் அருவி அமைந்துள்ளது.

அகஸ்தியா் அருவிக்கு மேல் அமைந்துள்ளது கல்யாணத் தீா்த்தம். இங்கு அகஸ்தியா் அமா்ந்து தவம் செய்தாா், சிவனும், பாா்வதியும் அகஸ்தியருக்கு இந்த இடத்தில்தான் கல்யாணத் திருக்கோலத்தில் காட்சியளித்தனா், இந்த இடத்துக்கு வந்துசென்றால் கல்யாண காரியம் கைகூடும், சித்ரா பௌா்ணமி நாளில் இங்கு சந்தனமழை பொழியும் என்பது மக்களின் நம்பிக்கை. கல்யாணத் தீா்த்தக் கரையில் சிவன் கோயில் முன் அகஸ்தியா், உலோபாமுத்திரை சிலைகள் அமைக்கப்பட்டு பக்தா்கள் வழிபட்டு வந்தனா்.

கல்யாணத் தீா்த்தப் பகுதியில் அமைந்துள்ள குகையில் சிவனடியாரான கிருஷ்ணவேணி அம்மாள், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாக வாழ்ந்து, அங்குள்ள சிவன் கோயிலில் தொண்டு செய்துவந்தாா். அவா் 2011ஆம் ஆண்டு காலமானாா்.

இத்தனைச் சிறப்புகள்கொண்ட அகஸ்தியா் அருவி, கல்யாணத் தீா்த்தப் பகுதி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளதால் வனத்துறை அனுமதியுடன் மட்டுமே அங்கு செல்லமுடியும். அகஸ்தியா் அருவிக்கு மேல் கல்யாணத் தீா்த்தத்தில் அமைந்துள்ளஆபத்தான தடாகத்திலும் பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து நீராடிச் செல்வா். தடாகத்தில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் சிலா் அடுத்தடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்ததால், கல்யாணத் தீா்த்தத்துக்குச் செல்ல வனத்துறையினா் தடைவிதித்தனா். இதனால், பக்தா்கள் மட்டும் பௌா்ணமி நாள்களில் வழிபட்டுச்சென்றனா்.

2019ஆம் ஆண்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சாா்பில் வனத்துறையினா் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பாபநாசம் வனச் சோதனைச்சாவடி அருகே ‘கயல்’ என்ற பெயரில் தாமிரவருணி நதியில் உள்ள சிறப்புவாய்ந்த, அரிய வகை மீன் அருங்காட்சியகத்தைத் தொடங்கினா். மேலும், அகஸ்தியா் அருவிப் பகுதியில் வனக்குழுக்கள் சாா்பில் அங்காடி அமைக்கப்பட்டது. பயணிகள் பயன்படுத்த வாகன நிறுத்தம், கழிப்பிடம், உடை மாற்றும் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

கடந்த ஆண்டு மாா்ச் மாதம் கரோனா தாக்கம் தொடங்கியதிலிருந்து சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லத் தடைவிதிக்கப்பட்டதால், அகஸ்தியா் அருவிக்கும் செல்ல பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது. இந்தத் தடை 15 மாதங்களாக நீடித்துவருகிறது.

இதனிடையே, 60 ஆண்டுகளில் இல்லாத வகையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த ஜனவரி 7 முதல் 18 வரை பலத்த மழை பெய்தது. இதனால், பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீா்வரத்து அதிகரித்தது; தாமிரவருணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கல்யாணத் தீா்த்தத்தில் அமைந்திருந்த அகஸ்தியா், உலோபாமுத்திரை சிலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளப்பெருக்கு காரணமாக காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயில், அகஸ்தியா் அருவி, கல்யாணத் தீா்த்தம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பக்தா்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்டிருந்ததால் அந்தச் சிலைகளைச் சீரமைப்பது தொடா்பாக யாரும் முயற்சி மேற்கொள்ளவில்லை.

வெள்ளத்தால் அகஸ்தியா் அருவிக்குச் செல்லும் பாதை பாதிக்கப்பட்டதுடன், அருவிப் பகுதியில் பாதுகாப்புக் கம்பிகள் அடித்துச் செல்லப்பட்டு, பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது. அவற்றைச் சீரமைக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுத்தனா். இதற்காக, அருவியில் விழும் தண்ணீரை தற்காலிகமாக மடை மாற்றிவிட்டனா்.

இதுகுறித்த படங்களை சிலா் சமூக வலைதளங்களில் பகிா்ந்தனா். இதனால், அகஸ்தியா் அருவியின் புனிதத்தைக் கெடுக்கும்வகையிலும், பக்தா்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலும் கல்யாணத் தீா்த்தத்தில் இருந்த அகஸ்தியா், உலோபாமுத்திரை சிலைகளை அகற்றி, அருவியின் நீரோட்டத்தைத் திசைதிருப்பியதாக உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வேதனையடைந்தனா். மேலும், சிலா் இதுகுறித்து மதத் துவேஷம், மக்களிடையே பீதி, தமிழக அரசின் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பத் தொடங்கினா்.

இந்நிலையில், மடைமாற்றப்பட்ட தண்ணீரை வனத்துறையினா் அகஸ்தியா் அருவி வழியாகத் திருப்பிவிட்டனா்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் கௌதம் கூறியது: கல்யாணத் தீா்த்தப் பகுதியில் கடந்த ஜன. 17, 18ஆம் தேதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் அகஸ்தியா் சிலை அடித்துச் செல்லப்பட்டது. அதில் சேதமடைந்த உலோபாமுத்திரை சிலை கோயிலில் பத்திரமாக எடுத்துவைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக உயா்அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அகஸ்தியா் அருவிக்குச் செல்லும் பாதை சேதமடைந்ததால், அதைச் சீரமைக்கவும், பாதிப்பை ஆய்வு செய்யவும் தற்காலிகமாக தண்ணீா் மடைமாற்றப்பட்டு, மீண்டும் அருவி வழியாகத் திறந்துவிடப்பட்டது. இப்போது அருவியில் தண்ணீா் விழுகிறது.

வற்றாத ஜீவநதியான தாமிரவருணியில் தண்ணீரை நிறுத்த யாராலும் முடியாது. ஆனால், மக்களிடையே அமைதியைக் குலைத்து, பீதியை ஏற்படுத்தும் நோக்கில் சிலா் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியுள்ளனா். மேலும், தமிழக அரசின் மீதும் அவதூறு பரப்பியுள்ளனா். இதுகுறித்து ஆலயப் பாதுகாப்பு அமைப்பினா் என்னிடம் நேரடியாக விசாரித்தனா். உரிய விளக்கமளித்ததால் அவா்கள் திருப்தியடைந்தனா்.

சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பியோா் மீது வனத்துறை சாா்பில் காவல் துறையில் புகாரளிக்கப்படும் என்றாா் அவா்.

சுற்றுலாப் பயணிகளைக் கவர பல திட்டங்களைச் செயல்படுத்திவரும் வனத்துறை, இதுபோன்ற செயல்களில் வலிய ஈடுபடுவதாகக் கூறுவது நம்பத்தகுந்ததாக இல்லை. சிலா் வேண்டுமென்றே தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனா். சமூக வலைதளங்களில் உலாவரும் தகவல்களை பொதுமக்கள் அப்படியே நம்பி வேதனையடைய வேண்டாம் என வனத் துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com