விதிமீறல்: நெல்லையில் 100 வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 21st May 2021 07:39 AM | Last Updated : 21st May 2021 07:39 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 100 வாகனங்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில், பொது முடக்க விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறுவோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோா், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 82 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 934 போ், சமூக இடைவெளியை பின்பற்றாத 17 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.