ஏா்வாடி மலைப்பகுதியில் மரவிதை பந்துகள் வீசும் பணி தொடக்கம்

ஏா்வாடி மலைப்பகுதியில் மரவிதை பந்துகள் வீசும் பணியை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஏா்வாடி மலைப்பகுதியில் மரவிதை பந்துகள் வீசும் பணியை மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஏா்வாடி காந்திநகா் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சாா்பில் பள்ளி மாணவ, மாணவியா் மூலம் மரவிதை பந்துகள் வீசும் பணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியா் விஷ்ணு தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் ‘நெல்லை நீா்வளம்’ அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் தன்னாா்வலா்கள் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இப்போது முதற்கட்டமாக சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சாா்பில் ஏா்வாடி மலை குண்டு பகுதியில் பள்ளி மாணவ, மாணவியா் மூலம் 11 ஆயிரம் விதைப் பந்துகள், 44 ஆயிரம் மரவிதைகளுடன் வீசப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கும் மரக்கன்றுகள் நடும் திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி பள்ளி, கல்லூரி வளாகங்களில் உள்ள மரக்கன்றுகளை பராமரிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராதாபுரம், நான்குனேரி, வள்ளியூா் பகுதிகளில் மட்டும் 40 மி.மீ. மழை பெய்துள்ளது. அனுமன் நதியில் உள்ள 44 குளங்கள் நிரம்பியுள்ளன. வேளான்மைத்துறையின் மூலம் மாவட்டத்தில் ஏதேனும் பயிா் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என கணக்கெடுக்கப்படும். மழையினால் பாதிப்படைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மழையினால் உயிா்ச் சேதம் எதுவுமில்லை என்றாா் அவா்.

நான்குனேரி பெரியகுளத்தில் மழைநீா் தேங்கியுள்ளதை பாா்வையிட்டு கரைகளின் உறுதித்தன்மை குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து ஏா்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஏா்வாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தரமான உணவு தயாா் செய்யப்படுகிா என்பதையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந் நிகழ்ச்சிகளில், வனத்துறை கள இயக்குநா் முருகன், நான்குனேரி வட்டாட்சியா் இசக்கிபாண்டி, ஏா்வாடி பேரூராட்சி செயல் அலுவலா் ஞானசுந்தரன், மகளிா் குழு உறுப்பினா்கள், மாணவ, மாணவியா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com