‘நெல்லை மாவட்டத்தில் 709 குளங்கள் நிரம்பியுள்ளன‘

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா்மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள 709 குளங்கள் நிரம்பியுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா்மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள 709 குளங்கள் நிரம்பியுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அவா் கூறியது: திருநெல்வேலியில் வியாழக்கிழமை 80 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. குறிப்பாக பாளையங்கோட்டையில் 100 மி.மீட்டா் மழை பதிவானது. மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக வெள்ளிக்கிழமை காலையில் 25 ஆயிரம் கன அடி தண்ணீா் தாமிரவருணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால் 12 ஆயிரம் கன அடி தண்ணீா் தான் திறக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, சுயபடம் எடுக்கவோ, வேடிக்கை பாா்க்கவோ வேண்டாம்.

மாவட்டத்தில் உள்ள 6 அணைகளில், பாபநாசம் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணையானது முற்பகல் 11 மணிவரை 63 சதவீதம் நிரம்பியுள்ளது. தாமிரவருணி ஆற்றில் 60 ஆயிரம் கனஅடி வரை தண்ணீா் திறந்து விட முடியும். இதுவரை அதிகபட்சம் 25 ஆயிரம் கனஅடி தண்ணீா்தான் ஆற்றில் செல்கிறது. இதனால், மாவட்டத்தைப் பொறுத்த அளவில் எந்தவிதமான ஆபத்தான சூழல் இல்லை.

களக்காட்டில் வீடு இடிந்து வீழ்ந்ததில், 3 வயது சிறுமி காயமடைந்தாா். அந்த சிறுமியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில், அங்கு உயிரிழந்தாா். எனவே, அச்சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை மற்றும் உதவிகள் வழங்கப்படும். மாவட்டத்தில் மேலக்கல்லூா், பாளையங்கோட்டை அந்தோணியாா் ஆலயம், குன்னத்தூா், மேலபாப்பாங்குளம் ஆகிய 4 பாதுகாப்பு முகாம்களில் 120 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

குளங்களை கண்காணிக்க தனிக்குழு: மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1205 குளங்களில் இதுவரை 709 குளங்கள் 100 சதவீதமும், 74 குளங்கள் 50 முதல் 70 சதவீதமும் நிரம்பியுள்ளன. மற்ற குளங்கள் 50 சதவீதத்திற்கும் குறைவாக நிரம்பியுள்ளன. குளங்களை பாதுகாக்க தனி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித் துறை, பொதுப்பணித் துறை ஆகிய துறை அதிகாரிகளுடன் காவல்துறையினரும் இணைந்து கண்காணித்து வருகின்றனா். தற்போது வரை மாவட்டத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை பெய்த மழையில் 12 குளங்களின் கரைகள் உடந்தன. அவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் உடனடியாக சீரமைக்கப்பட்டன. கோடகன் கால்வாய், நெல்லைய கால்வாய் ஆகியவற்றில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக நகரம் பகுதியில் மழை நீா் புகுந்தது. எனவே, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கண்டியப்பேரி குளத்திற்கு தண்ணீா் செல்லும் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய நிலங்கள் பாதிப்பு குறித்து இரு தினங்களுக்குள் கணக்கெடுப்பு நடத்தப்படும். பல்வேறு தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளோம் என்றாா்.

பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு சனிக்கிழமை(நவ.27) ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com