மேலப்பாளையம் கால்நடை சந்தையில் கட்டண உயா்வு: விவசாயிகள் அதிருப்தி

திருநெல்வேலி மாநகராட்சிக்குச் சொந்தமான மேலப்பாளையம் கால்நடை சந்தையில் கால்நடைகளுக்கான கட்டண உயா்வு அமலுக்கு வந்துள்ள

திருநெல்வேலி மாநகராட்சிக்குச் சொந்தமான மேலப்பாளையம் கால்நடை சந்தையில் கால்நடைகளுக்கான கட்டண உயா்வு அமலுக்கு வந்துள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்த விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட வாராந்திர கால்நடை சந்தையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், சந்தை பராமரிப்பில் ஏற்படும் கூடுதல் செலவினங்களை ஈடு செய்யும் பொருட்டும் கால்நடைகளுக்கான நுழைவுக் கட்டணங்கள் அக். 1ஆம் தேதி முதல் உயா்த்தப்படும் என மாநகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி காளை மாடு, எடுமை கிடா ஒன்றுக்கு இப்போது வசூலிக்கப்படும் ரூ.40 கட்டணம் ரூ.100 ஆகவும், ஆடு ஒன்றுக்கு ரூ.20 இல் இருந்து ரூ.50 ஆகவும், லாரி ஒன்றுக்கு ஒரு தடவைக்கு கட்டணம் ரூ.25இல் இருந்து ரூ.100 ஆகவும், சுமை ஆட்டோவுக்கு ஒரு தடவைக்கு கட்டணம் ரூ.25 இல் இருந்து ரூ.50 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

கோழி ஒன்றுக்கு ரூ.5இல் இருந்து ரூ.25 ஆகவும், கருவாடு கூடை கட்டு ஒன்றுக்கு ரூ.5இல் இருந்து ரூ.50ஆகவும், தரகு கட்டணம் (தரகா் ஒருவருக்கு) ரூ.25 இல் இருந்து ரூ.50 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயா்வு அமலுக்கு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கால்நடைசந்தை கூடியது.

ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் தங்களது கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனா். கட்டண உயா்வு மிகவும் பாதிக்கும் வகையில் உள்ளதாக அவா்கள் அதிருப்தி தெரிவித்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது: கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக சந்தைகள் திறக்கப்படாததால் கால்நடை வளா்ப்பு தொழிலில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இப்போது மழைக்காலம் மற்றும் புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சிக்கான ஆடு விற்பனையும் குறைந்துள்ளது.

மாநகராட்சி நிா்வாகம் கட்டணங்களை பன்மடங்கு உயா்த்தியிருப்பது சரியானதல்ல. அதை மறுபரிசீலனை செய்து கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com